×

வெள்ளலூர் குடியிருப்பு பகுதிகளில் குற்றங்களை கண்காணிக்க 32 கண்காணிப்பு கேமராக்கள்

கோவை, நவ.22: வெள்ளலூர் குடியிருப்பு பகுதிகளில் குற்றங்களை கண்காணிக்க 32 கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தை போலீஸ் கமிஷனர் சுமித்சரண் துவக்கி வைத்து பார்வையிட்டார். கோவை வெள்ளலூரில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வளாகம் உள்ளது. இங்கு 4 மாடி கட்டிடத்தில் 80 பிளாக்குகளில் 2816 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. கோவையில் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்து மாற்றப்பட்ட மக்கள் இங்கு வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் சட்ட விரோத செயல்களான திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் நடைபெறுவதாக புகார்கள் வந்தன. இதனை தடுக்கும் வகையில் போத்தனூர் காவல் நிலையம் சார்பில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியையொட்டிய பகுதிகளில் 32 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதனையொட்டி புறக்காவல் நிலையம் மற்றும் கேமராக்களின் துவக்க விழா நேற்று நடந்ததது. போலீஸ் கமிஷனர் சுமித் சரண் புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்து கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தை தொடங்கி வைத்தார். பிறகு பூங்காவில் மரக்கன்று நட்டார். அவர் கூறுகையில், ‘‘போத்தனூர் காவல்நிலையத்திற்குட்பட்ட சுந்தராபுரத்தில் 120 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. 2ம் கட்டமாக வெள்ளலூரில் 32 கேமராக்கள் பொருத்தப்பட்டு, புறக்காவல் நிலையமும் திறக்கப்பட்டுள்ளது. இங்கு ஷிப்டுக்கு 2 பேர் பணியில் இருப்பர். இதன் மூலம் குற்றங்கள் நடைபெறுவது குறையும்’’. என்றார்.இவ்விழாவில் துணை போலீஸ் கமிஷனர்கள் பாலாஜி சரவணன், உமா, செல்வக்குமார், உதவி போலீஸ் கமிஷனர் செட்ரிக்மேனுவேல் உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

Tags : areas ,Vellaloor ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்களில்...