×

தி.க. பிரமுகர் கொலை வழக்கு ஒத்திவைப்பு

கோவை, நவ.22: கோவை திராவிடர் விடுதலைக் கழகப் பிரமுகர் பாரூக் கொலை செய்யப்பட்ட வழக்கை ஒத்திவைத்து மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டது.
கோவை, உக்கடம் பிலால் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் பாரூக் (31). இரும்பு வியாபாரியான இவர், திராவிடர் விடுதலைக் கழகத்தில் தீவிரமாக செயல்பட்டார். கடந்த 2017ல் மார்ச் 16ம் தேதி பைக்கில் உக்கடம் சென்றபோது மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.  இது தொடர்பாக கோவையைச் சேர்ந்த அன்சாத் (31), சதாம் உசேன் (32), சம்சுதீன் (27), அக்ரம்சந்த் (32), ஜாபர் அலி (29), அப்துல் முனாப் (30) ஆகியோரை பெரியகடை வீதி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. பின் மேற்கண்ட 6 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரும் கடந்த 2018ல் ஜாமீன் கேட்டு கோவை முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அப்போது மனுவை விசாரித்த நீதிபதி குற்றம்சாட்டப்பட்ட சம்சுதீன், அன்சாத்,  ஜாபர் அலி ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கினார். மேலும் அக்ரம் சந்த், சதாம் உசேன், அப்துல் முனாப் ஆகியோரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.  இது குறித்த வழக்கு கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று நீதிபதி சக்திவேல் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது வழக்கு விசாரணையை டிசம்பர் 3ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags :
× RELATED வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் வியாபாரிகள் வேதனை