விலையில்லா மாடு வழங்கும் திட்டத்தால் கருங்கல்பாளையம் சந்தையில் மாடு விற்பனை அதிகரிப்பு

ஈரோடு, நவ.22:  தமிழக அரசின் விலையில்லாத கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தில் ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில்  மாடுகள் விற்பனை அதிகரித்தது.ஈரோடு கருங்கல்பாளையம் சோதனை சாவடி அருகே வாரந்தோறும் புதன் மற்றும் வியாழக்கிழமை மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். புதன்கிழமை வளர்ப்பு மாடுகளும், வியாழக்கிழமை கறவை மாடுகளும் விற்பனை செய்யப்படும். இந்த சந்தைக்கு ஈரோடு மற்றும் மாவட்டத்தின் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனை கொண்டு வருவர். மாடுகளை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, கோவா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து வாங்கி செல்வர். இந் நிலையில், ஈரோடு கருங்கல்பாளையத்தில் நேற்று சந்தை கூடியது. தமிழக அரசின் விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தில் காரைக்குடி, தேனி, நாமக்கல் போன்ற மாவட்டங்களில் இருந்து கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் 100க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு மாடுகளை வழங்குவதற்காக வாங்கி சென்றனர். இதனால், நேற்று வரத்தான 600 மாடுகளில் 90 சதவீதம் விற்பனையானது.

இதுகுறித்து மாட்டு சந்தை மேலாளர் முருகன் கூறியதாவது:நேற்று கூடிய சந்தையில் பசு-350, எருமை-150, கன்று-100 என 600 மாடுகள் வரத்தானது. மாடுகளை பல்வேறு மாவட்டம், மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் வாங்கி சென்றனர். குறிப்பாக, விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தில் அரசு சார்பில் பயனாளிகளுக்கு வழங்குவதற்காகவும், 100க்கும் மேற்பட்ட மாடுகள் வாங்கி செல்லப்பட்டதால், சந்தைக்கு வரத்தான மாடுகள் 90 சதவீதம் விற்பனையானது’ என்றார்.

Related Stories: