×

ஆக்கப்பணிகளில் முதல்வர் தன்னை அர்ப்பணிக்க வேண்டும்

புதுச்சேரி, நவ. 22: புதுச்சேரி முன்னாள் எம்பி பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் பிறந்த நாள் விழாவில் பேசிய முதல்வர் நாராயணசாமி, கவர்னரை “ஹிட்லரின் சகோதரி” என்று வர்ணித்தது கண்டனத்திற்குரியது. இந்திராவின் பெருமைகளை சொல்லி, காங்கிரஸ் நண்பர்களையும், புதுச்சேரி மக்களையும் உற்சாகப்படுத்த வேண்டிய விழாவில் கவர்னரை பற்றி பேசி விழாவின் புனிதத்தை பாழாக்கிவிட்டார். முதல்வர் யாரிடம் இருந்து உத்தரவு வாங்கி வெளிநாட்டுக்கு சென்றிருந்தாலும், தனக்கு மேல் இருக்கும் கவர்னருக்கு எழுத்து மூலமாக தெரிவித்து விட்டுத்தான் செல்ல வேண்டும் என்பது அடிப்படை விதி. சட்டம் படித்த இவருக்கு இந்த விதி தெரியாதா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் உரிமை வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அதற்கான அந்தஸ்தை பெறும்வரை நாம் பொறுத்திருக்க வேண்டும். மக்களை பற்றி கவலை கொள்ளும் அமைச்சர்கள், அடித்தள மக்களுக்கு அதிகாரம் வழங்கும் உள்ளாட்சி தேர்தலை 9 ஆண்டுகள் தள்ளிப்போட்டிருப்பது ஏன்? கவர்னர் சர்வாதிகாரியாக நடக்கிறார் என்று புதுச்சேரியின் பொதுமக்கள் நினைப்பதாக தெரியவில்லை.

அவர் அதிகாரிகளை மிரட்டுகிறார் என்கிறார் முதல்வர். ஆனால் இந்திராகாந்தியின் பிறந்த நாள் விழாவில் எல்லோருடைய முன்னிலையிலும், அரசு அதிகாரிகள் சிலர் கணக்கு தீர்க்கப்படுவர் என்றும், விரைவில் சிலர் சிறைக்கு செல்வார்கள் என்றும் கூறியது மிரட்டல் இல்லையா? அல்லது அவரது சர்வாதிகார போக்கை காட்டவில்லையா? அதிகாரிகள் சட்டத்தின்படி, அவர்களது சேவைக்குறிப்பை யார் எழுதுகிறாரோ, அவரது கட்டளைப்படிதான் நடப்பார்கள். நல்லது செய்ய நினைக்கும் நேர்மையான அதிகாரிகளையும் மிரட்டி புதுச்சேரியின் சிறிய வளர்ச்சியையும் முதல்வர் தடுத்து நிறுத்த வேண்டாம். அரசையும், கவர்னரையும் உன்னிப்பாக கவனிக்கும் மக்கள் இருவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு மாநில பிரச்னைகளை திறமையுடன் தீர்க்க வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். இவர்களது சண்டையை பார்த்த புதுச்சேரி மக்கள் அலுத்துப்போய் உள்ளனர். எனவே இனிமேலாவது இந்த சண்டையை நிறுத்திவிட்டு ஆக்கப்பணிகளில் முதல்வர் தன்னை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்
கூறியுள்ளார்.


Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...