புதுச்சேரியில் 2வது திருமணம் செய்த பெண் தூக்கிட்டு சாவு

புதுச்சேரி,  நவ. 22:  புதுவை, சாரம், கவிக்குயில் நகரில் 2வது திருமணம் செய்த பெண்  தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  புதுவை, சாரம், கவிக்குயில் நகரில்  வசிப்பவர் கிருஷ்ணமூர்த்தி (33). கார் டிரைவரான இவர் சொந்தமாக டிராவல்ஸ்  நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 6 வயதில் ஒரு மகன்  உள்ள நிலையில், மனைவி இறந்துவிட்டதால், நெல்லித்தோப்பு பெரியார் நகரைச்  சேர்ந்த வீரப்பன் மகள் சுமதி என்ற ரத்தினத்தை (29) கடந்த 2017ம்  ஆண்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். கிருஷ்ணமூர்த்தியைப்போல்,  சுமதிக்கும் ஏற்கனவே முதல் திருமணம் நடந்து ஒரு மகள் இருந்த நிலையில் அவரது  கணவர் இறந்துவிட்டார். குடும்ப சூழல் கருதி அவர் 2வது திருமணத்துக்கு  சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.இதனிடையே கிருஷ்ணமூர்த்தி,  சுமதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. சமீபகாலமாக தம்பதிகளுக்கு இடையே  அடிக்கடி குடும்ப சண்டை ஏற்பட்டதாக தெரிகிறது. குறிப்பாக குழந்தைகளை  கவனிக்கும் விவகாரத்தில் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக  இருவீட்டாரின் குடும்பத்தினர் சமரசம் செய்துள்ளனர்.

 இந்த  நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்தபோது அவர்களுக்கு இடையே  மீண்டும் தகராறு ஏற்பட்டதால் வாழ்க்கையில் விரக்தியடைந்த சுமதி தனது  அறையின் கதவை பூட்டிவிட்டு தூக்கில் தொங்கியுள்ளார்.

இதைப் பார்த்த  கணவரும், அக்கம்பக்கத்தினரும் கதவை உடைத்து மயங்கி கிடந்த சுமதியை மீட்டு  அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில்  அனுமதிக்கப்பட்டிருந்த சுமதி பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து  சுமதியின் தந்தை வீரப்பன் கோரிமேடு போலீசில் புகார் அளித்துள்ளார். அதில்,  தனது மகளை கிருஷ்ணமூர்த்தி தற்கொலைக்கு தூண்டியதாக குறிப்பிட்டு அவர் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி இருந்தார்.இதையடுத்து  சந்தேக மரணம் பிரிவில் வழக்குபதிந்த போலீசார் சுமதியின் சாவுக்கான காரணம்  குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவருக்கு திருமணமாகி 2  வருடமே ஆனதால் தாசில்தார் விசாரணையும் நடைபெறுகிறது. இதில் சுமதியின்  தற்கொலை முடிவுக்கு கிருஷ்ணமூர்த்திதான் காரணம் என தெரியவரும்பட்சத்தில்  அவர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கை மாற்றியமைத்து அவரை கைது செய்ய  கோரிமேடு போலீசார் முடிவு செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: