×

மழை இல்லாததால் கோமுகி அணையின் நீர்மட்டம் சரிவு

சின்னசேலம், நவ. 22: கல்வராயன்மலையில் போதிய மழை இல்லாததால் கோமுகி அணையின் நீர்மட்டம் 43 அடியாக சரிந்தது.   விழுப்புரம் மாவட்டத்தின் மேற்குப்பகுதியில் கல்வராயன் மலையடிவாரத்தில் கோமுகி அணை உள்ளது. இந்த அணையில் இருந்து உற்பத்தியாகும் கோமுகி ஆறு கள்ளக்குறிச்சி வழியாக பாய்ந்தோடி, கடலூர் மாவட்டம் நல்லூர் கிராமத்தில் மணிமுக்தா நதியுடன் கலக்கிறது. இந்த கோமுகி ஆற்றின் குறுக்கே செம்படர்க்குறிச்சி, சோமண்டார்குடி உள்ளிட்ட 11 இடங்களில் அணைக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளது. கோமுகி ஆற்று நீர் 40ஏரிகளுக்கு தண்ணீர் சென்று அதன்மூலம் 5860 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

 அதுமட்டுமல்லாமல் புதிய கால்வாய் பாசனத்தின் மூலம் மண்மலை, மாத்தூர், கரடிசித்தூர், மாதவச்சேரி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 5000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.  வடகிழக்கு, தென்மேற்கு பருவமழையின்போதும்,  கல்வராயன்மலையில் அதிக மழைபொழியும் காலங்களிலும் அணையில் நீர் சேமிக்கப்பட்டு  ஒவ்வொரு ஆண்டும் பாசனத்திற்காக அக்டோபர் மாதம் திறந்து விடப்படுவது வழக்கம். இந்நிலையில் கோமுகி அணையை திறக்கக்கோரி நடந்த பல்வேறு போராட்டங்களுக்
கிடையில் கடந்த 8ம் தேதி அமைச்சர், கலெக்டர் ஆகியோர் பாசனத்திற்கு அணையை திறந்து வைத்தனர். அப்போது கோமுகி அணையின் நீர்மட்டம் 44 அடியாக இருந்தது. மேலும் அணைக்கு கல்வராயன்மலை ஆறுகளில் இருந்து சுமார் 100கனஅடிநீர்வரத்து இருந்தது. இதனால் அணைக்கு வரும் உபரி நீரை ஆற்றிலும், கால்வாயிலும் பாசனத்திற்கு திறந்து விட்டனர்.  இந்நிலையில் கடந்த சில நாட்களாக கல்வராயன்மலையில் போதிய அளவில் மழை இல்லை. இதனால் அணைக்கு மிக குறைந்த அளவே நீர்வரத்து உள்ளது. ஆனால் அணையில் இருந்து பாசனத்திற்கு தொடர்ந்து தண்ணீர் திறந்து விடுவதால் அணையின் நீர்மட்டம் தற்போது 43 அடியாக சரிந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Tags : Komukhi Dam ,
× RELATED கள்ளக்குறிச்சி மாவட்டம் கோமுகி...