×

கடலூரில் கடைகள் அகற்றம்

கடலூர், நவ. 22: கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் ராமசாமி படையாட்சியார் முழு உருவ வெண்கல சிலை மற்றும் மணிமண்டபம் திறப்பு விழா வரும் 25ம் தேதி நடைபெறுகிறது.விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று மணிமண்டபத்தை திறந்து வைக்கிறார். மேலும் மஞ்சக்குப்பம் மைதான பகுதியில் விழா அரங்கு அமைக்கப்பட்டு அங்கு நலத்திட்ட உதவிகளும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, கடலூர் மஞ்சநகர மைதானம் மற்றும் கடலூர் பிரதான சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் உள்ள நிலையில் அவற்றை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடலூர் நகராட்சி ஆணையர் ராமசாமி தலைமையில் நகராட்சி ஊழியர்கள் பாரதி சாலை, சில்வர் பீச் சாலை உள்ளிட்ட பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் சிறு வணிக கடைகளையும் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் பணி மேற்கொள்ளப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடையில் இருந்த பொருட்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு வாகனங்களில் ஏற்றி செல்லப்பட்டு ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. பாதுகாப்பு பணியில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே கடலூர் நகரில் தொடர்ந்து விட்டு, விட்டு மழை பெய்து வரும் நிலையில் மஞ்சை நகர் மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகையை தொடர்ந்து மைதானத்தில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக பைப்லைன் அமைக்கப்பட்டு கால்வாய்கள் புதிதாக தோண்டப்பட்டு மழை நீரை வெளியேற்றும் பணியில் நகராட்சி பொறியாளர் ஜெயபிரகாஷ் மற்றும் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி பயணிக்கும் சாலை பகுதியில் செப்பனிடும் பணியை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறையினர் மேற்கொண்டுள்ளனர். புதிதாக சாலை அமைக்கும் பணியும் இடம்பெற்று வருகிறது. கடலூர் நகரில் குண்டும் குழியுமாக பல்வேறு சாலை பகுதிகள் சீரமைக்கப்படாத நிலையில் முதல்வர் வருகையை முன்னிட்டு அவரது சுற்றுப்பயண இடங்களில் மற்றும் போர்க்கால அடிப்படையில் சாலை சீரமைப்பு, மழை நீர் வெளியேற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : shops ,Cuddalore ,
× RELATED அடுத்த மாதம் முதல் ரேஷன் கடைகளில் இனி...