×

கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும்

திட்டக்குடி, நவ. 22: கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள கீழ்கல்பூண்டி, மேல்கல்பூண்டி, வடகராம்பூண்டி, கண்டமத்தான், பட்டாக்குறிச்சி, ஆலத்தூர், சித்தூர் ஆகிய கிராமங்களில் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளை அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் வளர்த்து வருகின்றனர்.கால்நடைகளுக்கு என மருத்துவமனை செல்ல வேண்டும் என்றால் சுமார் 12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தொழுதூர் சென்று மருத்துவம் பார்க்கும் நிலை உள்ளது. இதற்காக கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கீழ்கல்பூண்டி கிராமத்திலேயே துணை கால்நடை மருத்துவ மையம் தொடங்கப்பட்டு அந்தக் கட்டிடத்தில், தற்போது வானொலி அறையில் கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

வாரம் ஒருமுறை மட்டுமே மருத்துவர் வந்து செல்வதாகவும் கூறப்படுகிறது. தற்போது சரிவர செயல்படாமல் இருப்பதாகவும், மழைக் காலங்களில் கால்நடைகளுக்கு அடிக்கடி நோய்கள் தாக்குவதாகவும், இதனால் கால்நடைகள் இறக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.எனவே, இப்பகுதிக்கு நிரந்தரமாக கால்நடை மருத்துவமனையும் மற்றும் நிரந்தர மருத்துவரையும் நியமிக்க வேண்டும் என அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

இந்நிலையில், கீழகல்பூண்டி பகுதியை சேர்ந்த ரேவதி (35) என்பவருக்குச் சொந்தமான ஒரு கறவை மாடு உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்து போனது. அந்த கறவை மாடு வங்கியின் மூலமாக நிதி உதவி பெற்று வாங்கப்பட்டதாகவும், மாட்டின் மீது காப்பீடு செய்யப்பட்டு உள்ளதாகவும், அதற்காக இறந்த மாட்டை உடற்கூறு ஆய்வு செய்வதற்காக இரண்டு நாட்களாக மருத்துவர்களுக்காக காத்துக்கிடக்கும் அவலம் ஏற்பட்டு உள்ளது. இப்பகுதியிலுள்ள கால்நடைகளை பாதுகாக்கும் வகையில், புதிதாக மருத்துவ கட்டிடம்  கட்ட வேண்டும். நிரந்தர மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Veterinary Hospital ,
× RELATED ஊத்துக்கோட்டை கால்நடை...