ஆஸ்திரேலியாவில் இருந்து வந்தபோது சோகம் விமானத்தில் ஆண் குழந்தை மர்ம சாவு: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

சென்னை: ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை வந்தபோது விமானத்தில் 6 மாத ஆண் குழந்தை மர்மமான முறையில் இறந்தது. இதனால் இளம் தம்பதியினர் கதறி அழுதனர். இச்சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தாம்பரம் அருகே வேங்கைவாசலை சேர்ந்தவர் சக்தி முருகன். இவரது மனைவி கீதா. இருவரும் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் சாப்ட்வேர் இன்ஜினியர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு கிருத்திக் என்று பெயரிட்டனர். குழந்தை ஆஸ்திரேலியாவில் பிறந்ததால், அந்நாட்டு குடியுரிமை பெற்றுள்ளது.இந்நிலையில், கைக்குழந்தையுடன் 2 மாத விடுப்பில் சென்னைக்கு திரும்ப சக்தி முருகன், கீதா ஆகியோர் முடிவு செய்தனர். அதன்படி ஏர் ஏசியா விமானத்தில் நேற்று முன்தினம் மெல்போர்னில் இருந்து சக்தி முருகன், கீதா மற்றும் கீதாவின் தாய் பிரிட்டோ குயின் ஆகியோர் கைக்குழந்தையுடன் புறப்பட்டு மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு வந்தனர்.

அங்கிருந்து மற்றொரு ஏர் ஏசியா விமானம் மூலம் நள்ளிரவு 12.50 மணிக்கு சென்னை வந்தனர். அங்கு, குடியுரிமை சோதனைகளை முடித்து விட்டு தரை தளத்தில் உள்ள சுங்க சோதனை பிரிவுக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது, கீதாவின் கையில் இருந்த குழந்தை தூங்கிக் ெகாண்டிருந்தது.நமது நாட்டிற்கு வந்து விட்டோம் என்ற ஆனந்தத்தில் குழந்தையை கீதா கொஞ்சினார். ஆனால், குழந்தை எந்தவிதமான அசைவும் இல்லாமல் இருந்தது.  இதனால் தம்பதியர் அதிர்ச்சியடைந்தனர். பதற்றமும் அதிகரித்தது.

இதுபற்றி உடனே விமான நிலைய அதிகாரிகளிடம் தெரிவித்தனர். அவர்கள் உதவியுடன், விமான நிலைய வளாகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கிருத்திக்கை ெகாண்டு சென்றனர்.  அங்கு டாக்டர்கள் பரிசோதனையில் குழந்தை இறந்து விட்டது என தெரியவந்தது. இதனால் தம்பதியர் கதறி அழுதனர்.

தொடர்ந்து, விமான நிலைய அதிகாரிகள், விமான நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தம்பதியிடம் விசாரித்தபோது, கோலாலம்பூர் விமான நிலையத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து தூங்க வைத்துள்ளனர். அதற்கு பிறகு, சென்னையில் பார்த்தபோதுதான் குழந்தை அசைவற்ற நிலையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, குழந்தையை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். குழந்தை எப்படி இறந்தது என்பது பிரேத பரிசோதனை முடிவுக்குப்பிறகு தான் தெரியவரும் என விமான நிலைய போலீசார் தெரிவித்தனர்.  

Related Stories: