×

வன்கொடுமை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி

மன்னார்குடி, நவ. 20: குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் எதிர்ப்பு தினத்தையொட்டி மன்னார் குடியில் பள்ளி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை டிஎஸ்பி கார்த்திக் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறை மற்றும் வன்கொடுமைகளை தடுக்க வலியுறுத்தி நவ 19ம் தேதி உலக குழந்தைகள் மீதான வன்கொடுமை தடுப்பு தினம் உலக பெண்கள் மாநாட்டு அமைப்பினரால் கடைபிடிக்கப்படுகிறது. குழந்தைகளை உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்துதல், வார்த்தைகளாலோ அல்லது உணர்வுகளை பாதிக்கும் வகையில் அவர்களிடம் நடந்து கொள்வது அவர்கள் மீதான வன்கொடுமையாக பார்க்கப்படுகிறது.இந்நிலையில் திருவாரூர் கலெக்டர் ஆனந்த் அறிவுறுத்தலின் பேரில் சமூக பாதுகாப்புத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் சார்பில் குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி மன்னார்குடியில் நடைபெற்றது. ராஜகோபால சுவாமி கோயில் அருகே தேரடி பகுதில் இருந்து துவங்கிய பேரணியை டிஎஸ்பி கார்த்திக் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதில் தாசில்தார் கார்த்திக் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். பேரணியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவது குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திய படி கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். பேரணி முக்கிய வீதிகள் வழியாக வந்து குழந்தைகள் காப்பகத்தில் நிறைவடைந்தது. அங்கு மாணவிகளுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

Tags :
× RELATED வாக்காளர் விழிப்புணர்வு பேரணி