×

9ம் வகுப்பு மாணவன் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

திங்கள்சந்தை, நவ.20: திங்கள்சந்தை அருகே பள்ளியில் வைத்து விஷம் குடித்து மாணவன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திங்கள்சந்தை அருகே உள்ள ஆலங்கோடு பகுதியை சேர்ந்த 14 வயது மாணவன், தனியார் பள்ளி ஒன்றில் 9ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் மாணவன் பள்ளிக்கு வந்தான். காலையில் வகுப்புகள் தொடங்குவதற்கு முன், அசெம்பிளி நடந்தது. அப்போது அனைத்து வகுப்பு மாணவர்களும் நின்று கொண்டு இருந்தனர். இந்த மாணவனும் வரிசையில் சென்று கொண்டு இருந்தான். அப்போது திடீரென மயங்கி விழுந்தான். இதை பார்த்ததும் மற்ற மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக மாணவனை மீட்டு, நெய்யூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். காலையில் சாப்பிடாமல் வந்ததால் மாணவன் மயங்கி விட்டதாக ஆசிரியர்கள் நினைத்தனர். ஆனால் டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில் மாணவன் விஷம் குடித்து இருந்தது தெரிய வந்தது.

இந்த தகவலை கேட்டதும் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு வந்தனர். தற்போது மாணவன் சகஜ நிலையில் உள்ளான். அவனிடம் விசாரணை நடத்திய போது, சரியாக படிக்காமல் இருந்ததை தந்தை கண்டித்ததால், மனம் உடைந்து விஷம் வாங்கி வந்து, வகுப்பறையில் வைத்து குடித்ததாக கூறினான். மாணவனுக்கு ஆசிரியர்கள் அறிவுரை கூறினர். இந்த சம்பவத்தால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : suicide ,student ,
× RELATED கணவர், குழந்தைகள் அடுத்தடுத்து இறந்ததால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை