×

குமரியில் போலீஸ் பயணத்துக்கான பஸ் வாரண்ட் மோசடி?

நாகர்கோவில், நவ.20: நாகர்கோவிலில் இருந்து சென்ற அரசு பஸ்சில் போலீஸ் பஸ் வாரண்ட் மோசடியாக பயன்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தமிழக அரசு பஸ்களில் போலீசார் சிலர் இலவசமாக பயணம் செய்ய முயற்சித்து பல இடங்களில் கண்டக்டர்களுக்கும், போலீசாருக்கும் மோதல் மற்றும் தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. அலுவலக பணி சம்பந்தமாக செல்லும் போலீசார் பஸ் வாரண்ட் பெற்று செல்ல வேண்டும். சொந்த விஷயங்களுக்கு செல்பவர்கள் கண்டிப்பாக கட்டணம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் போலீஸ் பஸ் வாரண்ட் முறைகேடாக பயன்படுத்தப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாகர்கோவிலில் இருந்து மதுரைக்கு கடந்த சில நாட்களுக்கு முன், அரசு பஸ் சென்று ெகாண்டு இருந்தது. இந்த பஸ், நாங்குநேரி டோல்கேட் அருகே சென்ற போது அரசு போக்குவரத்து கழக சிறப்பு பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அப்போது கண்டக்டரிடம் போலீஸ் பஸ் வாரண்ட் இருந்துள்ளது. ஆனால் பஸ்சில் போலீஸ் யாரும் இல்லை. பூதப்பாண்டி காவல் நிலையத்தில் இருந்து போலீஸ் பஸ் வாரண்ட் கொடுக்கப்பட்டு இருந்தது. இது பற்றி கண்டக்டரிடம் அதிகாரிகள் விசாரித்த போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதையடுத்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

உயர் அதிகாரிகள் விசாரணையில், டைம் கீப்பர் ஒருவர் இந்த பஸ் வாரண்ட்டை கண்டக்டரிடம் கொடுத்தது தெரிய வந்தது.இது தொடர்பாக விசாரித்த போது, சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் ஒருவரும், டைம் கீப்பரும் கூட்டணி அமைத்து பயணம் செய்யாமலேயே பஸ் வாரண்ட்டை கண்டக்டரிடம் கொடுத்துள்ளனர். போலீஸ் பஸ் வாரண்ட்டை பொறுத்தவரை கண்டக்டர் டிக்கெட் கொடுக்க வேண்டும். இதற்கான பணத்தை போக்குவரத்து கழகத்துக்கு , தமிழக காவல்துறை செலுத்தி விடும். நாகர்கோவிலில் இருந்து மதுரைக்கு ₹220 கட்டணம் என்றால், இதற்கான டிக்கெட்டை வேறு நபருக்கு கொடுத்து விட்டு, அந்த தொகையை கண்டக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட போலீஸ், டைம் கீப்பர் ஆகியோர் பங்கிட்டு கொள்வார்கள் என கூறப்படுகிறது.

இது போன்று ஒரு நாளைக்கு 2, 3 போலீஸ் வாரண்ட் சென்றால் டைம் கீப்பருக்கும், சம்பந்தப்பட்ட போலீசுக்கும் அதிகளவில் பணம் கிடைக்கும். அந்த வகையில் தான் இந்த மோசடியை செய்துள்ளனர் என கூறப்படுகிறது.
பூதப்பாண்டி காவல் நிலையத்தில் இருந்து எப்படி போலீஸ் பஸ் வாரண்ட், டைம் கீப்பருக்கு சென்றது என்பதும் கேள்விக்குறியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட கண்டக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நாகர்கோவில் டவுன் ஏ.எஸ்.பி. இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி உள்ளார். டைம் கீப்பரையும் பணிக்கு வர வேண்டாம் என அதிகாரிகள் கூறி உள்ளனர். இந்த விவகாரத்தின் பின்னணியை மூடி மறைக்காமல் முறையாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : police trip ,Kumari ,
× RELATED புதிய புயல் முன்னெச்சரிக்கை...