×

6 குமரி மீனவர்கள் கடலோர காவல்படையால் மீட்பு

நாகர்கோவில், நவ.20:விசைப்படகு நடுக்கடலில் பழுதான நிலையில் குமரி மாவட்ட மீனவர்கள் ஆறு பேர் கடலோர காவல்படையால் மீட்கப்பட்டனர். குமரி மாவட்டம் சின்னத்துறை கிராமத்தை சேர்ந்த கென்னடி என்பவருக்கு சொந்தமான ‘எல்சடாய்’ என்ற சிறு விசைப்படகில் சின்னத்துறையை சேர்ந்த தோமஸ்(60) கென்னடி, அம்புரோஸ்(60), சசி(38), பீட்டர்(60), தனிஸ்டன் ஆகிய ஆறு மீனவர்கள் கடந்த 13ம் தேதி தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். 16ம் தேதி சுமார் 70 நாட்டிகல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது மீனவர்கள் சென்ற விசைப்படகு திடீரென்று பழுதடைந்தது. இச்செய்தியை மீனவர்கள் அப்பகுதியில் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பல்களுக்கு தங்களுக்கு உதவி செய்யுமாறு  வேண்டுகோள் விடுத்தனர். சரக்கு கப்பல்கள் மீனவர்களது இயந்திரம் பழுதடைந்து நடுக்கடலில் தத்தளிக்கும் செய்தியை தூத்துக்குடியில் உள்ள இந்திய கடலோர காவல் படைக்கு தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்ததும் இந்திய கடலோர காவல்படை தூத்துக்குடி கிளையின் டிஐஜி அரவிந்த் சர்மா வழிகாட்டுதலில் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ‘ஆதர்ஷ்’ என்ற கப்பல் ஆழ்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த ஆறு மீனவர்களையும், அவரது சிறு படகையும் மீட்டு தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

இது தொடர்பாக தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் சர்ச்சில் கூறுகையில், ‘மீனவர்களை மீட்ட கடலோர காவல்படையை பாராட்டுகிறோம். இதுபோன்று மீனவர்களது விசைப்படகு, நாட்டுப்படகு ஆழ்கடலில் பழுதடைந்து தத்தளிக்கும்போது அவர்களது விசைப்படகு பாதுகாப்பாக கரைக்கு மீட்டுக் கொண்டு வருவதற்கு இழுவைப்படகு அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். இழுவைப்படகு திட்டத்தை அரசு செயல்படுத்தும் வரை மீனவர்கள் விசைப்படகு, நாட்டுப்படகு ஆழ்கடலில் விபத்து காரணமோ, இயந்திர கோளாறு காரணமாக தத்தளிக்கும்போது இந்திய கடலோர காவல்படை தார்மீக பொறுப்பேற்று மீனவர்களது விசைப்படகை, நாட்டு படகையும் மீட்டு கரை சேர்க்க வேண்டும்’ என்றார்.

Tags : Coast Guard ,
× RELATED தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு...