புதுவை சட்டசபையை பாஜகவினர் முற்றுகை

புதுச்சேரி, நவ. 20:  புதுவையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தக்கோரி சட்டசபையை முற்றுகையிட முயன்ற பாஜகவினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் 67 பெண்கள் உள்பட 190 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரியில் விரைவில் உள்ளாட்சி தேர்தலை நடத்தக் கோரியும், அதற்கான அறிவிப்பை உடனடியாக வெளியிட வலியுறுத்தியும் புதுச்சேரி மாநில பாஜகவினர் சட்டமன்ற முற்றுகை போராட்டம் அறிவித்திருந்தனர். அதன்படி, நேற்று காலை மிஷன் வீதி ஜென்மராக்கினி மாதா கோயில் முன்பு பாஜகவினர் திரண்டனர். போராட்டத்துக்கு மாநில தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் தங்க.விக்ரமன், ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை தலைவர் செல்வம், ஏம்பலம் செல்வம் மற்றும் கட்சி நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொண்டர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் அவர்கள் முற்றுகை போராட்டம் நடத்துவதற்காக சட்டசபை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். போலீசார் அவர்களை ஆம்பூர் சாலை சந்திப்பில் பேரிகார்டுகள் வைத்து தடுத்து நிறுத்தினர். பேரிகார்டுகளை தாண்டிச்செல்ல பாஜகவினர் முற்பட்டதால் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, சாமிநாதன் எம்எல்ஏ, 67 பெண்கள் உள்பட 190 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச்சென்றனர். இப்போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: