×

நரம்பை-பனித்திட்டு இணைப்பு சாலை பணிகள் விரைவில் துவங்கும்

பாகூர், நவ. 20: புதுச்சேரி அடுத்த ஏம்பலம் தொகுதிக்கு உட்பட்ட பனித்திட்டு கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் கந்தசாமி பங்கேற்றார். அப்போது, அப்பகுதி மக்கள், மின்கேபிள் புதைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் ஒரு வாரத்திற்குள் சரி செய்யப்படாவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்தனர்.  இந்நிலையில், அமைச்சர் கந்தசாமி, கலெக்டர் அருண், ஆதிதிராவிடர் நலத்துறை செயலர் ஆலீஸ்வாஸ், இயக்குநர் ரகுநாதன், சுற்றுலா துறை இயக்குநர் முகமது மன்சூர், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மனோகரன், தாசில்தார் குமரன் மற்றும் பொதுப்பணித்துறை, சுற்றச்சூழல் அறிவியல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் நேற்று பனித்திட்டு கிராமத்திற்கு சென்றார்.

அங்கு, 2 ஆண்டுகளாக புதைவட மின் வினியோகம் செய்யும் பணியின்போது சேதமான சாலைகளை பார்வையிட்ட அவர், சாலையை உடனடியாக சீர்செய்ய பொதுப்பணித் துறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். மேலும் பனித்திட்டு முகத்துவாரத்தில் படகுதளம் அமைத்தல், பனித்திட்டு - நரம்பை கடற்கரை இணைப்பு சாலை, பனித்திட்டு காளியம்மன் கோயில் அருகே புதியதாக மழைநீரை சேமிக்கும் வகையில் குளம் அமைப்பது, சுற்றுலா திட்டம் உள்ளிட்ட பணிகள் தொடங்குவது குறித்து ஆய்வு மேற்கொண்டார். பனித்திட்டு கிராமத்தில் இருந்த 2 கி.மீ., தூரம் கடற்கரை வழியாக நடந்த அமைச்சரும், அதிகாரிகளும் நரம்பை கிராமத்துக்கு சென்றனர். இது குறித்து அமைச்சர் கந்தசாமி கூறும்போது, நரம்பை- பனித்திட்டு இணைப்பு சாலை அமைக்க கடந்த 2010ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது முடிவு செய்யப்பட்டது. அதன்பின் வந்த என்.ஆர். காங்., அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தவில்லை. தற்போது, மீண்டும் இந்த திட்டத்தை செயல்படுத்திட முடிவு செய்துள்ளோம். இது தொடர்பாக கள ஆய்வுகள் மேற்கொண்டு, அனைத்து பணிகளும் விரைவில் துவங்கப்படும், என்றார்.


Tags : Nerve-Frozen Connection Road ,
× RELATED வடலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை