கூட்டுறவு சர்க்கரை ஆலையை நடத்த மாற்று ஏற்பாடு

பாகூர், நவ. 20: புதுச்சேரி அரசு கூட்டுறவுத் துறை, புதுச்சேரி மாநில கூட்டுறவு ஒன்றியம் சார்பில் நடந்த 66ம் ஆண்டு அனைத்து இந்திய கூட்டுறவு வார விழா தவளக்குப்பத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஸ்மித்தா வரவேற்றார். துணை சபாநாயகர் பாலன் முன்னிலை வகித்தார். அமைச்சர் கந்தசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டுறவு துறை செயலர் அசோக்குமார், அரசு கொறடா அனந்தராமன் எம்எல்ஏ ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

சிறப்பு விருந்தினராக முதல்வர் நாராயணசாமி கலந்துகொண்டு 2018-2019ம் ஆண்டில் சிறந்த சேவைக்கான கேடயங்களை, கூட்டுறவு சங்கங்களிடம் வழங்கி பேசியதாவது:

 புதுச்சேரி மாநிலத்தில் கூட்டுறவு துறையின் கீழ் வங்கிகள், பால் நிறுவனங்கள், சர்க்கரை ஆலை, கல்லூரிகள், நூற்பு ஆலைகள்  உள்ளிட்ட பல அமைப்புகள் உருவாக்கப்பட்டது.  சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், சில அமைப்புகள் சரியான முறையில் செயல்படாமல் இருந்து வருகிறது.

கூட்டுறவு நிறுவனங்களை பொறுத்த வரை கிராமப்புற மக்களுக்கு, குறிப்பாக விவசாயிகளுக்கு உதவிகள் செய்திடும் வகையில் செயல்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில், விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடனை ரத்து செய்திட புதுச்சேரி அரசு முடிவு செய்தது. உடனே, அதற்கு முட்டுக்கட்டைகள் போடப்பட்டது. ஆனால் நாங்கள் டெல்லி சென்று அதனை சரி செய்து, ரூ.21 கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளோம்.  புதுச்சேரியில் கூட்டுறவு வங்கியை பொறுத்தவரை வருமானத்தை பெருக்கிட ரிசர்வ் வங்கி அதிகாரிகள் என்னையும், அமைச்சர் கந்தசாமியையும் சந்தித்து பேசி, உரிய முயற்சி எடுக்க வேண்டும் என்றனர். தற்போது அதற்கான அத்தனை முயற்சிகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம். கூட்டுறவு சர்க்கரை ஆலையை பொறுத்த வரை அதை அரசால் நடத்துவதில் சிரமம் இருக்கிறது. இதனால், மாற்று ஏற்பாடு செய்யப்படுகிறது. ஆனால், அதற்கும் முட்டுக்கட்டை போடப்படுகிறது.

கிராமப்புறங்களில் இருக்கும் கூட்டுறவு கடன் சங்கங்கள், விவசாயிகளுக்கு நேடியாக நிதி கொடுக்கும் காரணத்தினால் பல சங்கங்கள் சிறப்பான முறையில் செயல்படுகிறது. நேருவின் கனவான  கூட்டுறவே, நாட்டு உயர்வு என்பதை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் கூட்டுறவு நிறுவனங்கள் பல்கலைக்கழகங்கள், மருத்துவமனை, சர்க்கரை ஆலைகள், பல்நோக்கு விவசாய சங்கங்களை அமைத்து சிறப்பாக பணிபுரிகிறார்கள். நாங்கள், டெல்லி சென்று கூட்டுறவு அமைப்பின் தலைவரை சந்தித்து பேசினோம். அப்போது, புதுச்சேரியில் உள்ள கூட்டுறவு அமைப்புகளை சிறப்பானதாக்கிட உதவி செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.  கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள், தங்களின் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும். இல்லையெனில், கூட்டுறவு அமைப்பின் அடிப்படை தத்துவமே பாதிக்கப்படும். கூட்டுறவு சங்கங்களை மக்கள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், மங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், புதுச்சேரி விக்டர் கன்ட்ரோல் மற்றும் ஆராய்ச்சி நிலைய ஊழியர்கள், கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கம், ராஜீவ்காந்தி ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மாணவர் கூட்டுறவு பண்டக சாலை, ராஜாஜி நெசவாளர் கூட்டுறவு சங்கம், கரிக்கலாம்பாக்கம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம், புதுவை ஆசிரியர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம், மாகே மீனவர் கூட்டுறவு சங்கம், ஏனாம் பல்நோக்கு சேவை கூட்டுறவு சங்க நிர்வாகிகள் விருதுகளை பெற்றனர்.

மேலும், முதல்வரின் சிறந்த கேடயம் என்ற பிரிவில், புதுச்சேரி அரசு ஆசிரியர்கள் கூட்டுறவு கடன் சங்கத்திற்கும், கூட்டுறவு துறை அமைச்சரின் சிறந்த கேடயம் என்ற பிரிவில் புதுச்சேரி சுகாதார ஊழியர்கள் கடன் சங்கத்திற்கும் கேடயங்கள் வழங்கப்பட்டது.விழாவில், புதுச்சேரியில் உள்ள பல்வேறு கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  துணைப் பதிவாளர் இரிசப்பன் நன்றி கூறினார்.

Related Stories: