தடுப்புச்சுவர் எழுப்பி நீர்வழிப்பாதை அடைப்பு சங்கராபரணியின் கிளை ஆற்றை காணவில்லை

வில்லியனூர், நவ. 20:  வில்லியனூர் அருகே ஒதியம்பட்டு பகுதியில் உள்ள சங்கராபரணி ஆற்றில் இருந்து பிரிந்து நசுக்காறு என்ற கிளை ஆறு செல்கிறது. இது ஒதியம்பட்டு, கொம்பாக்கம், முருங்கப்பாக்கம் வழியாக சென்று கடலில் கலக்கிறது. இந்நிலையில் ஒதியம்பட்டு ஐஒசி அருகே நசுக்காற்றை ஆக்கிரமித்து தொழிற்சாலைகள் கட்டப்பட்டுள்ளதால் ஆறு பாதியில் துண்டிக்கப்பட்டு, இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டது. கடந்த 1945ம் ஆண்டின் வரைபடத்தில் இருந்த ஆறு தற்போது இல்லை. இதனால் ஆறு தற்போது குளம்போல் மாறிவிட்டது. இந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டு திருக்காஞ்சி-ஒதியம்பட்டு இடையே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே பொதுப்பணித்துறை சார்பில் ரூ.27 கோடியே 13 லட்சம் செலவில் மேம்பாலம் கட்டும் பணி துவங்கியது. சங்கராபரணி ஆற்றிலிருந்து பிரியும் கிளை ஆறான நசுக்காற்றுக்கு தண்ணீர் செல்லாதவாறு தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சங்கராபரணி ஆற்றில் இருந்து நசுக்காற்றுக்கு தண்ணீர் செல்வது முற்றிலும் தடுத்து நிறுத்தப்பட்டது.  இதன்காரணமாக கிளை ஆறு முற்றிலும் வறண்டு ேபாய்விட்டது.

இந்நிலையில் மழைக்காலம் துவங்கியபோதும் ஆற்றில் செல்லும் தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறதே தவிர சேமிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.  எனவே ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சுவற்றில் நசுக்காற்றுக்கு தண்ணீர் ெசல்வதற்கு வசதியாக ஷெட்டர் அமைக்க ேவண்டும். நசுக்காற்றில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற ேவண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இது குறித்து இயற்கை பாதுகாப்பு மையம் செயலாளர் சக்திவேல் கூறுகையில், மத்திய அரசின் ஜல்சக்தி துறை மூலம் நிதி பெற்று ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் அருண் காணாமல் போன 4 குளங்களை மீண்டும் கண்டுபிடித்து தூர்வாரியுள்ளார். தொடர்ந்து 144 குளங்களையும் தூர்வாரியுள்ளனர்.

புதுச்சேரியின் நிலத்தகவமைப்பின்படி நீர்நிலைகளை பாதுகாப்பதன் மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த முடியும். மேலும்  சங்கராபரணி ஆற்று படுகையில் இருந்து போடப்பட்டிருக்கும் போர்வெல் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு நகரப்பகுதிகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது. தற்போது ஆற்றில் தொடர்ந்து மணல் அள்ளப்படுவதால், தண்ணீரில் தரமும், சுவையும் மாறிவிட்டது. கடந்த காலங்களில் மக்கள் சந்திப்பின் போது நசுக்காற்றை பாதுகாக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தப்பட்டது. ஆனாலும் நடவடிக்கை எடுக்கவில்லை. மெல்ல மறைந்து வரும் கிளை ஆற்றினை மீட்டெடுப்பதன் மூலமாக நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தமுடியும். ஆக்கிரமிப்புகளால் துண்டிக்கப்பட்ட கிளை ஆறு, தற்போது மேம்பாலப்பணி என முற்றிலும் மறைந்து போகப்போகிறது.  எனவே மாவட்ட ஆட்சியர் இவ்விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது  தொடர்பாக வருவாய்த்துறையின் ஆவணங்களை எடுத்து பார்த்தாலே பல உண்மைகள் வெளியே வரும் என்றார்.

Related Stories: