×

சோலார் மின்விளக்கு அமைக்க கோரிக்கை

உளுந்தூர்பேட்டை,   நவ. 20: உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நகர் ரயில்வே மேம்பாலத்தின் வழியாக   தினந்தோறும் நூற்றுக்கணக்கான பேருந்துகள், கார் உள்ளிட்ட கனரக வாகனங்கள்   சென்று வருகிறது. இந்த ரயில்வே மேம்பாலம் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில்   பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த பாலம் குறுகிய பாலமாகவும்,   வளைவுகள் உள்ளதாலும் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இந்த   மேம்பாலத்தில் ஏற்பட்டு வரும் விபத்துகளை தடுக்க காவல்துறை அதிகாரிகள் உரிய   பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் விபத்துகள் தினந்தோறும்   நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்தும்,  உயிரிழந்தும்  வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர்  விபத்துகளை  தடுக்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் பிரதிபலிப்பான் கண்ணாடி  பொருத்தப்பட்டது.  ஆனால் இந்த பாலத்தில் அமைக்கப்பட்ட உயர்கோபுர  மின்விளக்குகள் எரியாததால்  இரவு நேரத்தில் மீண்டும் விபத்துகள் ஏற்படும்  நிலை உள்ளது. இந்த பாலத்தில்  உள்ள உயர்கோபுர மின்விளக்குகளுக்கு மின்சார  கட்டணம் கட்டுவதில் சிக்கல்  ஏற்பட்டு வருவதாலும், இதற்கென போதிய நிதி  ஒதுக்கீடு செய்வதில்  ஏற்படும் சிரமத்தினாலும் அடிக்கடி இந்த  விளக்குகள் நிறுத்தி வைக்கப்படுவதாக  தெரிகிறது. இதனால் ஏற்படும் சிரமங்களை  தடுக்க ரயில்வே மேம்பாலத்தில்  சூரியசக்தியிலான (சோலார்) மின்விளக்குகளை அமைக்க  வேண்டும் என வாகன ஓட்டுனர்கள், சமூக  ஆர்வலர்கள் மீண்டும் கோரிக்கை  வைத்துள்ளனர்.

Tags :
× RELATED சுடுகாட்டில் மின்விளக்கு வசதி...