×

ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

விழுப்புரம்,  நவ. 20: விழுப்புரம் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி கிராம மக்கள்  ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம்  அருகே நன்னாடு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வி.பாளையத்திலுள்ள  டாஸ்மாக் கடையை மூடக்கோரி நேற்று ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு  போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில்இருந்த போலிசார்  பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சியரிடம் மனுஅளிக்குமாறு அறிவுறுத்தினர்.  இதனைத்தொடர்ந்து ஆட்சியரிடம் பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:  நன்னாடு கிராமத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக செயல்பட்டு கொண்டிருக்கும்  மதுக்கடையை மூட பலமுறை வலியுறுத்தியும் அதிகாரிகள் எந்தவிதமான  நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த இடத்தில் குடிமகன்களால் தினமும் பல  சண்டைகள், விபத்துக்கள், வழிப்பறி, பெண்களுக்கு பாலியல் தொந்தரவுகள்,  திருட்டுகள், விவசாய நிலங்களில் விவசாயிகளை தாக்குதல், விளைபொருட்களை,  விவசாய கருவிகளையும் சேதப்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.டாஸ்மாக் கடை அருகே ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது.

மேலும்  கடந்த சிலநாட்களுக்கு முன்பு நன்னாடு புதிய காலனிக்கு செல்லும் சாலையில்  சென்ற பொதுமக்களை குடிமகன்கள் தாக்கியதால் ஆத்திரமடைந்து சாலைமறியலில்  ஈடுபட்டனர். இதுபோன்ற சட்டம்-ஒழுங்கை பாதிக்கும் சம்பவங்கள்  அடிக்கடி நடப்பதால் வி.பாளையத்தில் செயல்படும் டாஸ்மாக் கடையை மூடக்கோரி  போராட்டத்தில் ஈடுபட்டோம். ஆனால் இதுவரை அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும்  எடுக்கவில்லை. எனவே ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து நன்னாடு கிராம மக்களின்  உயிருக்கும், உடமைக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு மனுவில்  கூறப்பட்டுள்ளது.

Tags : Siege ,Collector ,
× RELATED அரசு நிலத்தை மீட்ககோரி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை