வேப்பூர் அருகே பரபரப்பு நெடுஞ்சாலையில் வேன் கவிழ்ந்து டிரைவர் உள்பட 10 பேர் படுகாயம்

வேப்பூர் நவ. 20: வேப்பூர் அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓய்வுபெற்ற வனச்சரகர்கள், டிரைவர் என 10 பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. வேலூர் மாவட்டம் ஆற்காடு, அணைக்கட்டு, விருப்பாச்சிபுரம் உள்ளிட்ட சுற்றுவட்ட பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற வனச்சரகர்கள் 9 பேர் திருச்சியில் நடைபெற்ற சங்கக்கூட்டத்தில் கலந்து கொள்ள ஒரு வேனில் சென்று கொண்டிருந்தனர். கடலூர் மாவட்டம் வேப்பூர் சிறுநெசலூர் அடுத்த புல்லூர் பஸ் நிறுத்தம் அருகே வேன் சென்று கொண்டிருந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த தடுப்புக்கட்டையில் மோதி சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேன் டிரைவர் ஆற்காடு மோசூர் பகுதியை சேர்ந்த மதனகோபால் மகன் ஜெகதீஸ் (24) ஓய்வுபெற்ற வனச்சரகர்கள் லோகநாதன் (65), முகம்மது இக்பால் (73), மாணிக்கம் (65), கோவிந்தசாமி (66) ஜெயசீலன் (62), துரை (65) ரங்கநாதன் (77), ரமேஷ் (64), கிறிஸ்டோபர் திலக் (74) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வேப்பூர் போலீசார் இவ்விபத்து ஏற்பட்ட போக்குவரத்தை பாதிப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Vepur ,highway ,
× RELATED சிறுமியை பலாத்காரம் செய்த டிரைவர் போக்சோவில் கைது