×

பேருந்து நிலைய ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுநல இயக்கம் காத்திருப்பு போராட்டம்

கடலூர், நவ. 20: கடலூர் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கடலூர் நகராட்சி அலுவலகத்தில் பொதுநல இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடலூர் நகராட்சி பேருந்து நிலையத்தில் சட்டவிரோதமாக உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும், ரவுடிகள் வியாபாரிகளிடம் மாமூல் வசூலிப்பதை தடுக்க வேண்டும், சிறு வியாபாரிகள் சங்க உறுப்பினர்களுக்கு உரிய இடத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்புக் கொடியுடன் காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி கடலூர் அனைத்து பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் காத்திருப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் வெண்புறா குமார் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் திருமாறன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சேகர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் திருமார்பன், பேருந்து நிலைய சிறு வியாபாரிகள் சங்க தலைவர் சுகுமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தில் கருப்புக் கொடியுடன் நிர்வாகிகள் ஊர்வலமாக வந்து பின்னர் நகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் சுப்புராயன், துணைத்தலைவர் கஜேந்திரன், தமிழர் கழகம் மதிவாணன், சமூக நீதி பாசறை சாய்ராம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கலந்துகொண்டனர். இதுகுறித்து தகவலறிந்து கடலூர் நகராட்சி வளாகத்திற்கு வந்த புதுநகர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் அளித்ததின்பேரில் அனைவரும் போராட்டத்தை ைகவிட்டு கலைந்து சென்றனர். காத்திருப்பு போராட்டம் காரணமாக கடலூர் நகராட்சி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : protest ,
× RELATED பொதுவேலைநிறுத்தம் மாவட்டம் முழுவதும் மறியல் போராட்டம்