×

போராட்டம் நடத்த மக்கள் முடிவு கழிவறை இல்லாமல் இயங்கும் ஓட்டிமேடு அரசு பள்ளி

விருத்தாசலம், நவ. 20: விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் அருகே உள்ள ஓட்டிமேடு கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் கல்வி நலனுக்காக விருத்தாசலம் கல்வி மாவட்ட நிர்வாகத்தின் கீழ் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இதில் சுமார் 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் தலைமை ஆசிரியர் உள்பட 10 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு போதுமான கழிவறை வசதி இல்லாததால் அருகில் உள்ள சாலையிலும், அருகில் உள்ள பள்ளிக் கட்டிடத்தின் பின்புறத்திலும் சென்று சிறுநீர் கழித்து வருகின்றனர்.

மேலும் பள்ளியின் பின்புறம் உள்ள பாழடைந்த செப்டிக் டேங்க் அருகே சிறுநீர் கழிக்க செல்கின்றனர். இதனால் தவறி செப்டிக் டேங்கில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் அதிகளவில் மாணவிகள் அவசர காலங்களில் வெளியே செல்வதால் அசம்பாவிதங்கள் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. மேலும் மாணவ, மாணவிகளுக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் என்ற சூழலில் பெற்றோர்கள் கவலையில் உள்ளனர். பள்ளி உருவாகியதிலிருந்தே கழிவறை வசதிகள் இல்லாமல் உள்ளதால் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பெரிய அளவில் போராட்டம் நடத்துவது எனவும், மாணவர்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட கல்வித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : protest ,Otimedu Government School ,
× RELATED மக்கள் பிரதிநிதிகள் மீது தொடரப்பட்ட...