×

வேளாண் உதவி இயக்குநர் அலுவலக கேட்டை திறக்காவிட்டால் முற்றுகை போராட்டம்

கொள்ளிடம், நவ.20: கொள்ளிடம் வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்துக்குச் செல்லும் பூட்டியே கிடக்கும் நுழைவாயில் கேட்டை திறக்காவிட்டால் போராட்டம் நடத்தப் போவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.நாகை மாவட்டம் கொள்ளிடம் வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலர் கட்டிடத்திற்கும் பக்கத்தில் உள்ளது. கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு செல்லும் வாயில்கேட் திறக்கப்பட்டுள்ள நிலையில், வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு செல்லும் நுழைவாயில் கேட் மட்டும் பூட்டியே கிடக்கிறது.ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நுழைவாயில் கேட் கடந்த மூன்று வருடங்களாக பூட்டப்பட்டுள்ளது.இதனால் வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு தினந்தோறும் செல்லும் விவசாயிகள் அவதியடைகின்றனர். கொள்ளிடம் ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சிகளைச் சேர்ந்த 200 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் முக்கிய ஒன்றாக இருந்து வருகிறது. அரசால் விவசாயிகளுக்கு வழக்கும் மானியங்களைப் பெறுவதற்கு அடிக்கடி விவசாயிகள் வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு வந்து செல்கின்றனர். உரங்கள், விதைகள், விதை நுண்ணுட்டங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை பெறுவதற்கும் விவசாயிகள், அங்குள்ள குடோனுக்கு விவசாயிகள் எளிதில் வந்து செல்ல முடியவில்லை. மேலும் விவசாய குடோனுக்கு அரசால் அனுப்பி வைக்கப்படும் உரம் மற்றும் விதை மூட்டைகளை லாரிகளில் ஏற்றி வந்து குடோனுக்குள் எடுத்துச் செல்ல சிரமம் அடைகின்றனர். அரசுக்கு சொந்தமான அலுவலகத்துக்குச் செல்லும் நுழைவாயில் கேட்டை திறக்க அரசு அதிகாரிகளே திறக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

இதுகுறித்து கொள்ளிடம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தின் சார்பிலும், பலமுறை கோரிக்கை விடுத்தும் மூடியே கிடக்கும் கேட்டை திறக்க நடவடிக்கை எடுக்க வில்லை. இதுகுறித்து விவசாயிகள் சங்க சீர்காழி தாலுகா துணை செயலாளர் பாக்யராஜ் கூறுகையில்,வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு விவசாயிகள் சென்று வரும் நுழைவாயில் கேட் 3 வருடமாக மூடப்பட்டுள்ளது. இதுகுறித்து பல முறை கோரிக்கை விடுத்தும் திறக்கவில்லை. ஒரு வாரத்துக்குள் மூடிக்கிடக்கும் கேட்டை திறக்கவில்லை என்றால் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நூற்றுக்கணக்கான விவசாயிகளுடன் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.


Tags : struggle ,Office ,Assistant Director of Agriculture ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...