×

சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு நாகை நகர பகுதியில் போலீசாரின் மெத்தனத்தால் செல்போன் பறிப்பு அதிகரிப்பு

நாகை, நவ.20: நாகையில் போலீசாரின் மெத்தன போக்கால் செல்போன் பறிப்பில் ஈடுபடும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.நாகை நகர பகுதியில் முன்பு எல்லாம் நடந்து செல்வோரிடம் செல்போன், பணம் ஆகியவற்றை பறித்து செல்லும் சம்பவங்கள் மிக குறைவாகவே காணப்பட்டது. அதிலும் இரவு நேரங்களில் மட்டுமே இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வந்தது.ஆனால் இன்று பகல் நேரங்களில் செல்போன் பறிப்பு மற்றும் பணம் பறிப்பு போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது. நாகை புதிய பஸ்ஸ்டாண்டில் இருந்து இறங்கி நடந்து செல்வோர்கள் செல்போனை எடுத்து பேச தொடங்கினால் அல்லது ஏதாவது தகவல் வந்துள்ளதா என்று பார்ப்பதற்காக செல்போனை எடுத்தால் முகமூடி அணிந்து பைக்கில் வரும் 2 மர்ம நபர்கள் மின்னல் வேகத்தில் அந்த செல்போனை பறித்து சென்று விடுகின்றனர். அவர்கள் எங்கிருந்து வருகின்றனர்.

எந்த வழியாக செல்கின்றனர் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கு காரணம் குற்றங்களை கண்காணிக்க வேண்டிய குற்றப்பிரிவு போலீசார் மெத்தனமாக செயல்படுவதுதான். இதுபோன்ற செயல்களை செய்யும் குற்றவாளிகளை ரகசியமாக கண்காணிக்க குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் மெத்தனமாக செயல்படுவதால் நடந்து செல்லும் பெண்கள் மற்றும் ஆண்களிடம் மிகவும் எளிதாக செல்போனை தட்டி பறித்து சென்று விடுகின்றனர்.அதேபோல் பஸ்ஸ்டாண்டில் பஸ்சில் ஏறும் போது அல்லது இறங்கும் போது பயணிகள் பையில் வைத்துள்ள பணத்தை எளிதில் திருடிவிடுகின்றனர். பணத்தை பறி கொடுத்தவர்கள் யார் என தெரியாமல் சுற்றி வரும் நிலையும் உள்ளது. எனவே போலீசார் மெத்தன போக்கை கைவிட்டு விழிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags : activists ,police crackdown ,area ,Naga ,
× RELATED பல்லடத்தில் கோடை வெயிலால் காய்ந்த...