மூதாட்டி இறுதி ஊர்வலத்தில் வீடு அருகே பூக்களை வீசியதால் தகராறு

ஒரத்தநாடு, நவ. 20: ஒரத்தநாடு அருகே மூதாட்டி இறுதி ஊர்வலத்தில் வீடு அருகே பூக்களை வீசியதால் ஏற்பட்ட தகராறில் 2 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக 6 பேர் மீது வழக்குப்பதிந்து 4 பேரை போலீசார் கைது செய்தனர். ஒரத்தநாடு தாலுகா வீரடிவாரி கிராமத்தை சேர்ந்த மூதாட்டி சிவபாக்கியம் (70). இவர் கடந்த 14ம் தேதி உடல்நல குறைவால் இறந்தார். அவரது இறுதி ஊர்வலம் அன்று மாலை வீட்டிலிருந்து புறப்பட்டு ஒரத்தநாட்டிலிருந்து செல்லம்பட்டி செல்லும் சாலையில் சென்றது. அப்போது சிவபாக்கியத்தின் உறவினர்கள் ராஜேந்திரன் (55), கணேசன் (29) ஆகியோர் சாலையோரத்தில் இருந்த வீடுகள் எதிரே பூக்களை வீசி சென்றனர். ராஜகோபால் என்பவரது வீட்டுக்கு எதிரிலும் வீசினர். இதனால் ராஜகோபால் சம்பவ இடத்துக்கு வந்து ராஜேந்திரன், கணேசன் ஆகியோரிடம் வீட்டுவாசலில் பூக்களை வீசாதீர்கள் என்று கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்து ராஜகோபாலை இருவரும் தாக்கினர். இதில் படுகாயமடைந்த ராஜகோபால், ஒரத்தநாடு அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

Advertising
Advertising

இந்நிலையில் ராஜேந்திரன் மகளான ஆசிரியை தீபா அவ்வழியே வந்தார். அப்போது தீபாவை ராஜகோபாலின் உறவினர்கள் பார்த்திபன் (28), ராஜதுரை (27), கண்ணகி, மீனாட்சி ஆகியோர் தாக்கினர். இந்த தகவல் கிடைத்ததும் ஒரத்தநாடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ராஜகோபாலை தாக்கிய ராஜேந்திரன் மற்றும் கணேசன் மீது ஒரு வழக்குப்பதிவும், தீபா கொடுத்த புகாரின்பேரில் பார்த்திபன், ராஜதுரை, கண்ணகி, மீனாட்சி ஆகியோர் மீதும் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இதைதொடர்ந்து நேற்று ராஜேந்திரன், கணேசன், பார்த்திபன், ராஜதுரை ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் கண்ணகி, மீனாட்சி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: