×

உயர் கல்விக்கு தகுந்தாற்போல் கல்வி தரத்தை உயர்த்த வேண்டும்

கும்பகோணம், நவ. 20: கும்பகோணத்தில் பாமக பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மாநில துணை பொது செயலாளர் வெங்கட்ராமன், தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில தலைவர் ஆலயமணி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாமக மாநில தலைவர் ஜிகே.மணி பங்கேற்றார். இதைதொடர்ந்து பாமக மாநில தலைவர் ஜிகே.மணி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக அரசு, விவசாயிகளுக்கு தேவையான அளவில் யூரியா வழங்க வேண்டும். நெல்லுக்கு கூடுதலான விலையை நிர்ணயம் செய்து விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறை வழங்கும் மானியத்தை அதிகரிக்க வேண்டும். இப்போது நெல்லுக்கு அறிவித்துள்ள விலை கட்டுப்படியாகாது.

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும். தமிழக அரசு கல்வி துறையில் நல்ல மாற்றங்களை கொண்டு வர வேண்டும். மற்ற மாநிலங்களை விட உயர்கல்வியில் தமிழகத்தில் குறைவான மாணவர்கள் சேர்க்கையே உள்ளதால் உயர்கல்விக்கு தகுந்தாற்போல் மேலும் கல்வி தரத்தை உயர்த்த வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினாலும் மத்திய அரசு நிலுவையில் வைத்துள்ளது. மாணவர்களுக்கு அரசு பொது தேர்வு மட்டும் போதுமானதாகும். நீட் தேர்வு தேவையில்லை என்றார்.

Tags :
× RELATED “மிகமோசம்” பிரிவில் நீடிக்கும் காற்றின் தரம்