காரில் விரைவாக சென்று துறையூர் கோர்ட்டில் காதல் ஜோடி தஞ்சம் பெண்ணின் உறவினர்கள் பைக்கில் துரத்தியதால் பரபரப்பு

துறையூர், நவ.20: துறையூர் அடுத்த உப்பிலியபுரம் அழகாபுரியை சேர்ந்தவர் பாஸ்கர்(29). இவரும் இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 15ம் தேதி அன்று நாமக்கல் பாலதண்டாயுதபாணி கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.இந்நிலையில் 4 நாட்களாக பெண்ணை காணாமல் அவரது பெற்றோர் உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதற்கிடையே இருவருக்கும் திருமணம் நடந்ததை அறிந்த உப்பிலியபுரம் போலீசார் நேற்று இருவீட்டார் தரப்பையும் காவல் நிலையத்திற்கு அழைத்துள்ளனர். திருமணமாகி 4 நாட்களாக சேலம் மாவட்டம், ஆத்தூரில் தங்கியிருந்த காதல் ஜோடி நேற்று காரில் உப்பிலியபுரம் காவல்நிலையத்திற்கு வந்துள்ளனர். உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் பெண்ணின் உறவினர்கள் கும்பலாக இருப்பதைக்கண்ட பாஸ்கர் காரில் நேராக துறையூர் நீதிமன்றத்திற்கு விரைந்துள்ளார். கார் காவல் நிலையத்தில் நிற்காமல் சென்றதை கண்ட பெண்ணின் உறவினர்கள் பைக்கில் காரை சினிமா பட பாணியில் துரத்திக்கொண்டு சென்றுள்ளனர்.

பைக்குகள் பின்னால் துரத்தி வருவதை கண்ட பாஸ்கர் காரை வேகமாக ஓட்டிக்கொண்டு துறையூர் நகர சாலைகள் வழியாக நீதிமன்ற வளாகத்தில் நுழைந்துள்ளார். நீதிமன்ற வளாகத்தினுள் கார் நுழைவதை கண்ட சுவாதியின் உறவினர்கள் துரத்திச் சென்று நீதிமன்ற வளாகத்திலேயே காரை மறித்து அதை தட்டியுள்ளனர். இச்சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து உடனடியாக காரில் இருந்து இறங்கிய காதல் தம்பதியினர், நீதிமன்றத்துக்கு உள்ளே சென்று தஞ்சம் அடைந்தனர். காரை துரத்திக்கொண்டு பைக்கில் வந்த பெண்ணின் உறவினர்களான 5 இளைஞர்களை நீதிமன்ற வளாகத்தில் இருந்த போலீசார் சிறைபிடித்தனர்.இதையடுத்து துறையூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புவியரசு உத்தரவின் பேரில், முசிறி டிஎஸ்பி., செந்தில்குமார் நீதிமன்ற வளாகத்திற்கு வந்து பெண்ணின் உறவினர்களான ஹரிகரன்(19), சந்தோஷ்குமார்(23), சபரிநாதன் (21), குனால்(22), கோகுல்(20) என 5 பேர்களை கைது செய்து துறையூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: