கட்டாமல் பாதியில் விடப்பட்ட கால்வாய் பாலத்தால் சாலையில் குட்டை போல் தேங்கி கிடக்கும் கழிவுநீர் துறையூர் அருகே அழகாபுரியின் அவலம்

துறையூர், நவ.20: துறையூர் அருகே அழகாபுரியில் உள்ள தெரு சாலையில் குட்டைபோல் கழிவுநீர் தேங்கி போக்குவரத்திற்கு இடையூறை ஏற்படுத்தி வருவதோடு சுகாதார சீர்கேட்டையும் உருவாக்கியுள்ளது.துறையூர் அருகே உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்திலுள்ளது அழகாபுரி ஊராட்சி. இந்த ஊராட்சியில் தெற்கு மாரியம்மன் கோயில் தெருவில் கட்டப்பட்டு வந்த கால்வாய் பாதியில் கைவிடப்பட்டதால் கழிவுநீர் கடந்து செல்ல முடியாதபடி சாலையிலே பல ஆண்டுகளாக தேங்கி நிற்கிறது. மேலும் ஊரில் அனைத்து பகுதியிலிருந்து வரும் கழிவுநீர் இந்த சாலையிலேயே குட்டை போல் தேங்கி கிடக்கிறது. தற்போது வாகனங்கள் செல்லும்போது நடந்து செல்லும் பாதசாரிகள் மீதும், அருகில் உள்ள கோயில் மீதும், சாக்கடை நீர் தெறிக்கிறது என குற்றச்சாட்டு் உள்ளது.

இது பற்றி பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை. உப்பிலியபுரம் ஊராட்சிஒன்றிய அலுவலகத்திலும் புகார் செய்து இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த சாலை கழிவுநீரால் கொசுக்களின் கூடாரமாக மாறி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் இதனால் இப்பகுதி மக்களிடையே காய்ச்சல், டெங்கு போன்ற நோய்கள் பரவி இருப்பதாகவும் கூறுகின்றனர். ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் இந்த அவலநிலை ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து தேங்கி கிடக்கும் கழிவுநீர் செல்ல கால்வாயை பாலத்தை கட்டித்தர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: