×

சிலிண்டர் திருட்டு வழக்கில் கொள்ளையன் சுரேஷ்க்கு 2 நாள் போலீஸ் கஸ்டடி

திருச்சி, நவ.20: திருச்சி மாவட்டம் நெ.1 டோல்கேட் அருகே உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் பின்பக்க சுவரை துளையிட்டு லாக்கரில் இருந்த 457 பவுன் நகை, ரூ.19 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளை கும்பல் கடந்த ஜனவரி 27ம் தேதி கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் கடந்த அக்டோபர் 1ம் தேதி லலி தா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளையில் திருவாரூரை சேர்ந்த மணிகண்டன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த கொள்ளை வழக்கில் கொள்ளை கும்பல் தலைவன் முருகன் பெங்களூரு நீதிமன்றத்திலும், இவரது அக்கா மகன் சுரேஷ் செங்கம் நீதிமன்றத்திலும் சரணடைந்தனர். இவர்களின் கூட்டாளியான மதுரை கணேசனை தனிப்படை போலீசார் கைது செய்து ஏராளமான நகைகளை பறிமுதல் செய்தனர்.

வங்கி கொள்ளையில் லாக்கரை கேஸ் கட்டர் மூலம்் வெட்டி எடுத்தனர். இதற்காக சங்கிலியாண்டபுரத்தில் உள்ள பழைய இரும்பு கடையில் இருந்து கேஸ் சிலிண்டரை ஆட்டோவில் வைத்து எடுத்து சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து பாலக்கரை போலீசார் தனியாக ஒரு வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் கேஸ் சிலிண்டர் திருட்டு வழக்கில் சிறையில் உள்ள சுரேசை கஸ்டடியில் விசாரிக்க பாலக்கரை போலீசார் முடிவு செய்தனர். இதையடுத்து திருச்சி ஜேஎம் 5 நீதிமன்றத்தில் 8 நாள் கஸ்டடி கேட்டு இன்ஸ்பெக்டர் ஆரோக்கியதாஸ் நேற்று மனுத்தாக்கல் செய்தார். இதையடுத்து சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் சுரேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட் பாலகிருஷ்ணன், 2 நாட்கள் கஸ்டடி கொடுத்து உத்தரவிட்டார். இதையடுத்து சுரேசை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Suresh Suresh ,
× RELATED தங்கம் கடத்தல் வழக்கு சொப்னா, சிவசங்கருக்கு 5 நாள் போலீஸ் காவல்