×

குப்பை மலையாக மாறிய காய்கறி மார்க்கெட் தொற்று நோய் பீதியில் பொதுமக்கள், வியாபாரிகள்

துறையூர், நவ.20: துறையூர் காய்கறி மார்க்கெட்டில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக அள்ளப்படாமல் உள்ள குப்பையால் தொற்றுநோய் பரவும் அச்சத்தில் பொதுமக்களும், வியாபாரிகளும் உள்ளனர். துறையூர் மருத்துவமனை சாலையில் தினசரி காய்கறி மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த காய்கறி மார்க்கெட்டில் தினமும் சேரும் குப்பைகளை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் காலையில் வந்து அள்ளிச்செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இங்கு குப்பைகள் அள்ளப்படாமல் மார்க்கெட் உள்ளே நுழைவாயில் பிரதான சாலையில் அப்படியே குவித்து வைத்தபடி கொட்டிக் கிடக்கின்றன. குப்பைகள் 10 நாட்களுக்கு மேலாக அள்ளப்படாமல் மலைபோல் குவிந்து கிடப்பதால் மக்கள் நடந்து செல்ல முடியாத நிலையிலும், அப்பாதையை கடந்து செல்ல முடியாமலும் பெரும் இடையூறை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் குழந்தைகள் வயதானவர்கள் நடந்து செல்லும்போது மழைநீர் மற்றும் கழிவுநீர் குப்பைகளில் படிந்துள்ளதால் அதன் மீது கால் வைத்து வழுக்கி விழுந்து காயம் ஏற்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. குப்பைகள் மலைபோல் குவிந்து கிடப்பதாலும் காய்கறி, வாழைத்தண்டு மற்றும் வாழை இலைகளில் இருந்து வரும் சாருகளில் வரும் நீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் மார்க்கெட் வரும் பொதுமக்கள் மூக்கை மூடிக்கொண்டு செல்ல வேண்டிய அவலநிலையும் எற்பட்டுள்ளது. மேலும் தேங்கி நிற்கும் கழிவு நீரில் கொசுக்கள் இருப்பதால் வைரஸ் காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் கூறுகின்றனர். நகராட்சி கடை வியாபாரிகள் தாங்களே சொந்த செலவில் குப்பைகளை அள்ளி வெளியேற்றி வருவதாகவும் வேதனையுடன் கூறினர்.

மேலும் நகராட்சி நிர்வாகத்திற்கு கடைகளுக்கான வாடகையை மாதம் மாதம் வழங்கியும் குப்பைகளை தங்களே சொந்த செலவில் அகற்ற வேண்டிய சூழ்நிலை இருப்பதாக வியாபாரிகள் வருத்தத்துடன் தெரிவித்தனர். நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் குப்பைகள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அகற்றப்படாமல் அப்படியே உள்ளது. எனவே தொற்று நோய் பரவும் முன்பு நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : garbage mountain ,
× RELATED வையம்பட்டி அருகே அகற்றப்படாத...