×

இந்த நாள் எரிச்சநத்தம் கிராமத்தில் கல்குவாரி, கிரஷர் அமைக்க எதிர்ப்பு சப்கலெக்டரிடம் விவசாயிகள் மனு

சிவகாசி, நவ. 20: சிவகாசி அருகே, எரிச்சநத்தம் கிராமத்தில் கல்குவாரி, கிரஷர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் சப்கலெக்டரிடம் நேற்று மனு அளித்தனர். சிவகாசி அருகே, எரிச்சநத்தம் கிராமத்தில் கல்குவாரி மற்றும் கிரஷர் அமைக்கும் பணியில் தனியார் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து, சிவகாசி சப்கலெக்டர் அலுவலகம் எதிரே நேற்று மறியல் போராட்டம் நடத்தபோவதாக அறிவித்திருந்தனர். இதையொட்டி சப்கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்த 50க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம், சப்கலெக்டர் தினேஷ்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் நாராயணசாமி தலைமையில், விவசாய சங்கத்தினர் சப்கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

எரிச்சநத்தம் கிராமத்தில் கல்குவாரி, கிரஷர் அமைக்கும் பணியில் தனியார் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. குவாரி அமையவுள்ள இடம் அருகே பள்ளி, கோவில், திருமண மண்டபம், காலனி வீடுகள் உள்ளன. விவசாய நிலங்களும் அதிகமாக உள்ளன. கல்குவாரி அமைந்தால் மக்களின் வாழ்வாதாரம், நிலத்தடி நீர், விவசாயம் பாதிக்கப்படும். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. மேற்படி இடத்தில் ஏற்கனவே இருந்த குவாரி நீதிமன்ற உத்தரவு மூலம் மூடப்பட்டது. தற்போது புதிதாக கல்குவாரி மற்றும் கிரஷர் அமைக்க முயற்சி எடுத்து வருகின்றனர். எனவே, குவாரி அமைப்பதை தடை செய்ய வேண்டும். இல்லாவிடில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்திருந்தனர். மனுவை பெற்று கொண்ட சப்கலெக்டர் இடத்தை நேரில் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதை தொடர்ந்து விவசாய சங்கத்தினர் கலைந்து சென்றனர்.

Tags : anti-subcooler ,Kalkwari ,Erikhannam village ,
× RELATED கல்குவாரி நீரில் மூழ்கி மனைவி, மகன்...