×

வருஷநாடு பகுதியில் ஓம இலை மூலிகை பறிக்கும் பணி மும்முரம்

வருஷநாடு, நவ. 20:வருஷநாடு பகுதியில் ஓம இலை மூலிகை பறிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வருஷநாடு பகுதியில் மயிலாடும்பாறை உப்புத்துறை, ஆத்துக்காடு, ஆட்டுப்பாறை பகுதியில் ஓம இலை மூலிகை பறிக்கும் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர். இந்த மூலிகை இலைகளை உலர்த்தி காய வைத்த பின்பு கிலோ ஒன்றுக்கு ரூ.40ல் இருந்து ரூ.60 வரை விற்பனை செய்கின்றனர். மூலிகை வைத்தியர்கள் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், மதுரை உள்ளிட்ட நகர்ப் பகுதிகளில் இருந்து வருஷநாடு மலை கிராம பகுதிக்கு வந்து மொத்தமாகவும், சில்லறையாகவும் வாங்கிச் செல்கின்றனர்.

மலை கிராமத்தில் வாழும் மலைவாழ் மக்களிடம் இதுபோன்ற மூலிகையை வாங்கிச் செல்வது வழக்கமாக உள்ளது. மலைவாழ் மக்களின் அன்றாட வாழ்வாதார செலவிற்காக இதுபோன்ற மூலிகை பறிக்கும் பணிகளில் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த மூலிகை சளி, இருமலை போக்குவதற்கு மிகவும் உகந்ததாக அமையும் எனவும் கூறுகின்றனர். இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறுகையில், ‘தேன் எடுக்கும் பணியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஈடுபட்டு வந்தோம். தற்போது தேன் எடுக்கும் சீசன் முடிந்துவிட்டது. எனவே மூலிகை இலைகள் மற்றும் மூலிகை கிழங்குகள் பறிக்கும் பணிகளில் தீவிரமாக களமிறங்கி உள்ளோம். மேலும் எங்களுக்கு என்று நிரந்தரமாக வாழக்கூடிய வாழ்க்கையை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக முதல்வர் உதவி செய்ய வேண்டும்’ என்றனர்.

Tags : area ,Varushanadu ,
× RELATED வாட்டி வதைக்கும்...