×

வீட்டு நாய்களுக்கு தடுப்பூசி அவசியம்

திருப்புத்தூர், நவ.20: வீட்டில் நாய் வளர்ப்பவர்கள் முறையான தடுப்பூசிகள் போட்டு தங்கள் வீட்டிற்குள்ளேயே வளர்க்க வேண்டும் என்று செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். திருப்புத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், மானாமதுரையிலிருந்து நாய்பிடிக்கும் வாகனமும் சிறப்பு பணியாளர்களும் வரவழைக்கப்பட்டனர். புதுப்பட்டி, தம்பிபட்டி, தென்மாபட்டி, பெரியகடை வீதி, மதுரைரோடு, பெரியார் நகர், புதுத்தெரு, சிவகங்கை ரோடு, ரதவீதிகள் உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் சுற்றித்திரிந்த 70க்கும் மேற்பட்ட தெருநாய்கள் பிடிக்கப்பட்டது. பின்னர் அதற்காக வடிவமைக்கப்பட்ட வேனில் ஏற்றப்பட்டது. இந்த நாய்கள் நகரைத் தாண்டியுள்ள வனப்பகுதியில் விடப்பட்டன. இந்த ஏற்பாட்டினை திருப்புத்தூர் பேரூராட்சித் துப்புரவு ஆய்வாளர் அபுபக்கர், மேற்பார்வையாளர் மோகன் மற்றும் பணியாளர்கள் செய்திருனர்.

இதுகுறித்து செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், திருப்புத்தூர் நகரில் தெருநாய்கள் குறித்து பொதுமக்கள் மற்றும் வர்த்தக சங்கத்தினர் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக பிடிக்கப்படும் நாய்கள் கால்நடை மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டு மருத்துவர்கள் மூலம் கருத்தடை செய்யப்பட்டு நாய்களுக்கு உணவளித்து ஓய்வளித்து விடப்படும் என்றார். மேலும் வீட்டில் நாய் வளர்ப்பவர்கள் முறையான தடுப்பூசிகள் போட்டு தங்கள் வீட்டிற்குள்ளேயே வளர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Tags :
× RELATED தடுப்பூசி விஷயத்தில் ஏழைகளுடன்...