×

சிவகங்கை டூ தேவகோட்டைக்கு கூடுதல் பஸ் இயக்க வேண்டும்

சிவகங்கை, நவ.20: சிவகங்கையிலிருந்து காளையார்கோவில் வழியாக தேவகோட்டைக்கு கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கையிலிருந்து காளையார்கோவில் வழியே தேவகோட்டை செல்லும் வழித்தடம் இப்பகுதியின் முக்கியமான வழித்தடம் ஆகும். சிவகங்கையிலிருந்து சருகணி வரை தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் சென்று பிறகு தேவகோட்டைக்கு தனியாக சாலை பிரிகிறது.
முக்கியமான இவ்வழித்தடத்தில் சிவகங்கையிலிருந்து தேவகோட்டை வரை செல்லும் டவுன்பஸ் ஒன்றும் தேவகோட்டையிலிருந்து காளையார்கோவில், சிவகங்கை வழியே மானாமதுரை செல்லும் ரூட் பஸ் ஒன்று மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல் காளையார்கோவிலிலிருந்து தேவகோட்டைக்கு ஒரு டவுன் பஸ் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

இப்பகுதியிலுள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் இந்த பஸ்களை மட்டுமே நம்பி உள்ளனர். குறைவான அளவிலேயே பஸ்கள் இயக்கப்படுவதால் அனைத்து பஸ்களிலும் கூட்டம் அதிகமாக உள்ளது. காலை, மாலை நேரங்களில் இந்த பஸ்களில் அதிகப்படியான கூட்டங்கள் உள்ளதால் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் பெண்கள் கடும் சிரமம் அடைகின்றனர். இவ்வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பயணிகள் கூறியதாவது: சிவகங்கையிலிருந்து தேவகோட்டை செல்வதற்கு காளையார்கோவில் வழி செல்வதே குறைவான தூரமாகும். ஆனால் இங்கிருந்து மிகக்குறைவான அளவில் பஸ் இயக்கப்படுவதால் திருப்பத்தூர், காரைக்குடி சென்று தேவகோட்டை செல்ல வேண்டியுள்ளது. இவ்வாறு சென்றால் கூடுதலாக சுமார் இருபது கி.மீ தூரத்திற்கும் அதிகமாகும். இதனால் தேவகோட்டை செல்லும் பஸ்ஸில் அதிகமான கூட்டம் காணப்படுகிறது. எனவே மிக முக்கியமான இவ்வழித்தடத்தில் தொடர்ச்சியாக செல்லும் வகையில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என்றனர்.

Tags : Sivaganga du Devakottai ,
× RELATED சென்னை சென்ட்ரலில் நாளை முதல் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி