×

முதுகலை, கணினி ஆசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்

சிவகங்கை, நவ.20: டிஆர்பி தேர்வில் தேர்ச்சி பெற்ற முதுகலை ஆசிரியர்கள் மற்றும் கணினி ஆசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழகத்தில் பணிபுரியும் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மே மாதம் கோடை விடுமுறையில் நடத்துவது வழக்கம். கலந்தாய்வில் பங்கு பெற விரும்பும் ஆசிரியர்களிடம் ஏப்ரல் மாத இறுதிக்குள் விண்ணப்பம் பெறப்படும். மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலரால் பணியிட மூப்பின் அடிப்படையில் ஒன்றியம் வாரியாக ஆசிரியர் பட்டியலும் காலிப் பணியிட விபரமும் வெளியிடப்படும். இந்நிலையில் இந்த ஆண்டு நீதிமன்ற வழக்குகள் காரணமாக கலந்தாய்வு நடைபெறுவது தாமதமாக தொடங்கப்பட்டு நவ.11ம் தேதி முதல் நடந்து வருகிறது. மாறுதலில் சென்ற முதுநிலையாசியர் பணியிடங்களில் பணி மூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டு அவர்களும் புதிய பணியிடங்களில் பணியேற்றனர். அதன் பிறகு காலியாக உள்ள 17 பாடங்களுக்கான 2 ஆயிரத்து 144 காலிப்பணியிடங்களுக்கு 2019, செப்டம்பர் மாதம் டிஆர்பி தேர்வு நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்ச்சி பெற்றோரின் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு நியமனத்திற்காக காத்திருக்கின்றனர். 841 கணினி ஆசிரியர்களை நியமனம் செய்ய தேர்வுகள் நடத்தப்பட்டு நீதிமன்ற வழக்குகளால் முடிவுகள் அறிவிக்கப்படாமல் உள்ளது. உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டால் இப்பணியிடங்கள் நிரப்பப்படுவது பாதிக்கப்படும். எனவே விரைந்து பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் இளங்கோவன் கூறியதாவது: உள்ளாட்சித் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு அறிவித்தால் ஆசிரியர் பணி நியமனம் தடைபடும். தேர்தல் முடிவடைந்த பின்பு மிகக்குறைந்த நாட்களில் அரசு பொதுத்தேர்வு வந்துவிடும். இதனால் மாணவர்கள் பெரிதும் பாதிப்படைவர். எனவே அதற்கு முன்பாக டிஆர்பி தேர்வு செய்துள்ள முதுகலை ஆசிரியர்களையும் மற்றும் கணினி ஆசிரியர் பணியிடங்களையும் நியமனம் செய்ய வேண்டும் என்றார்.

Tags : Masters ,
× RELATED சில்லி பாயின்ட்…