×

சிறப்பு பார்வையாளர் ஆய்வு பிப்ரவரியில் இறுதி வாக்காளர் பட்டியல்

சிவகங்கை, நவ.20: பிப்ரவரி மாதம் வெளியிடப்படவுள்ள இறுதி வாக்காளர் பட்டியல் தொடர்பாக சிறப்பு பார்வையாளர் ஆய்வுக்கூட்டம் நடந்தது.
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. கலெக்டர் ஜெயகாந்தன் முன்னிலை வகித்தார். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு கூடுதல் செயலர் மற்றும் சிவகங்கை மாவட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் சம்பத் தலைமை வகித்து பேசியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள வாக்காளர் பட்டியல் நூறு சதவீதம் ஆய்வு செய்து அதனடிப்படையில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணியை வாக்குச்சாவடி மைய நிலைய அலுவலர்கள் ஒவ்வொரு பகுதியாகச் சென்று ஒருவர் கூட விடுபடாத அளவிற்கு ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும். வெளியூரிலிருந்து மாறுதலாகி வரும் நபர்கள் குறித்த விபரம் சரிசெய்தல் மற்றும் நீக்கல் போன்ற பணிகளை கள ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்த பின்பு பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பிப்ரவரி மாதம் வெளியிடவுள்ள இறுதி வாக்காளர் பட்டியலுக்கு முன்பாக பெறப்படும் விண்ணப்பங்களை சேர்ப்பதற்கு ஏற்ப புதிய வாக்காளர்கள் குறித்து கண்டறிந்து விண்ணப்பங்கள் பெற வேண்டும். எவ்விதக் குழப்பமும் ஏற்படாது. இப்பணியை சரியான முறையில் மேற்கொண்டு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட அனைவரும் பணியாற்ற வேண்டும். இவ்வாறு பேசினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) ராமபிரதீபன், தேவகோட்டை ஆர்டிஓ சங்கரநாராயணன், தேர்தல் பிரிவு தாசில்தார் சுந்தரராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து சிவகங்கை நகராட்சி மற்றும் இளையான்குடி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளுக்கு சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி மற்றும் வாக்குச்சாவடி மையங்களின் உட்கட்டமைப்பு குறித்து பார்வையிட்டார்.

Tags :
× RELATED அழகப்பா பல்கலையில் புதிய பட்டய படிப்பு அறிமுகம்: துணைவேந்தர் ஜி.ரவி தகவல்