×

காரைக்குடி மக்கள் பீதி இரண்டு மாதத்தில் 500 பவுன் கொள்ளை

காரைக்குடி, நவ.20: காரைக்குடி பகுதியில் தொடர் கொள்ளை சம்பவங்களால் மக்கள் பீதியில் உள்ளனர். இரண்டு மாதத்தில் 500 பவுன் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. நகரின் வளர்ச்சிக்கு ஏற்ப குற்றச்சம்பங்களும் அதிகரித்து வருகிறது. வீட்டை உடைத்து திருட்டு, வழிப்பறி, நகைக்காக கொலை செய்வது என்பது உள்பட பல்வேறு குற்றச்சம்பங்கள் நடந்து வருகிறது. கடந்த மாதம் காந்தி நகரை சேர்ந்த ஜெயராமன் என்பவர் தனது வீட்டை பூட்டி விட்டு ஊருக்கு சென்றார். அவரது வீட்டு கதவை உடைத்து 143 பவுன் நகை ெகாள்ளையடிக்கப்பட்டது.. ஜவுளிக்கடை அதிபர் இளங்கோ மணி என்பவர் தனது வீட்டை பூட்டி விட்டு ஊருக்கு சென்ற நிலையில் அவரது வீட்டு கதவையும் உடைத்து 250 பவுன் நகை, ரூ.5 லட்சம் பணம் திருடப்பட்டுள்ளது. அதேநாளில் சுப்பிரமணியபுரம் தெற்கு விஸ்தரிப்பு பகுதியில் விஜயா என்பவர் வீட்டில் தனியாக இருந்த போது உள்ளே நுழைந்த மர்மநபர் அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 17 பவுன் நகையை பறித்தார். சத்தம் கேட்டு ஓடிவந்து திருடனை பிடிக்க முயன்ற பெண்ணின் கழுத்தில் கிடந்த 4 பவுன் செயினையும் பறித்துக்கொண்டு தப்பினார்.

தவிர அழகப்பாபுரம் பகுதியில் மர்மநபர்கள் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி திருடி செல்லும் சம்பவம் அரங்கேறி வருகிறது. இவ்வாறு கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் 500 பவுனுக்கு மேல் திருட்டு போய் உள்ளது. ஆனால் இதுவரை எந்த ஒரு சம்பவத்துக்கும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாத நிலையே தொடர்கிறது. குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடிக்கவும், அவர்களது நடமாட்டத்தை கண்காணிக்கவும் நகரின் முக்கிய பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் உள்ளன. இருப்பினும் குற்றவாளிகளை பிடிக்க முடியாத நிலையே தொடர்கிறது. குற்றங்களை தடுப்பதற்காகவும், உடனடியாக அடையாளம் கண்டுபிடிப்பதற்கும் அமைக்கப்பட்ட குற்றப்பிரிவு போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பது இல்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், குற்றப்பிரிவு போலீசாரை பொறுத்தவரை ஒரு வழக்கு பாலோ செய்து செல்லும் போது அவர்களுக்கு வேறு டூட்டி போட்டு அனுப்பிவிடுகின்றனர். தவிர முக்கிய தலைவர்களின் வருகைக்காக பாதுகாப்பு பணிக்கும் அனுப்பிவிடுகின்றனர். இதனால் குற்றவாளிகளை பாலோ செய்ய முடியாத நிலை உள்ளது. குற்றப்பிரிவு போலீசாருக்கு கூடுதல் வசதி செய்து தர வேண்டும். அவர்களை தன்னிச்சையாக செயல்பட விட வேண்டும் என்றனர்.

Tags : Karaikudi ,
× RELATED உடல் பருமன் குறைய சிறுதானியங்கள் சாப்பிடுங்க