×

தொண்டி அரசு பள்ளியில் விளையாட்டு அரங்கம் அமைக்க கோரிக்கை

தொண்டி, நவ.20:  தொண்டி மற்றும் சுற்றுவட்டார அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு விளையாட்டு அரங்கம் இல்லாததால், போட்டிகளில் வெற்றி பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் மாணவர்களின் நலன் கருதி தொண்டி ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு அரங்கம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விளையாட்டு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டி பகுதியில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் விளையாட்டு திடல் மற்றும் அரங்குகள் உள்ளது. விளையாட்டு சாதனங்களும் போதிய அளவு உள்ளது. ஆனால் தொண்டி, நம்புதாளை உள்ளிட்ட அரசு பள்ளிகளில் போதிய இடவசதி இல்லாததால் மாணவர்கள் விளையாட்டில் கவனம் செலுத்தியும் வெற்றி பெற முடியவில்லை. தனியார் பள்ளிகளுக்கு இணையான திறமை இருந்தும் பயிற்சி இல்லாததால் அவர்கள் கடைசி நேரத்தில் தோல்வி அடைகின்றனர்.

தொண்டி செய்யது முகம்மது அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகம் மாவட்டத்தில் போதுமான இடத்தை பெற்றுள்ள பள்ளியாகும். ஆனால் வகுப்பறை கட்டிடங்கள் போக மிஞ்சிய இடம் காலியாகவே உள்ளது. இதில் மாணவர்கள் விளையாடுவதற்கு ஏற்ற விளையாட்டு உபகரணங்களை பொருத்த வேண்டும். மேலும் இறகு பந்து விளையாட்டு போன்ற உள்அரங்கு விளையாட்டுகளுக்கும் அரங்குகள் அமைக்க வேண்டும். அப்போது தான் தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாணவர்கள் வெற்றியை பெற முடியும்.

இதுகுறித்து சாதிக் பாட்சா கூறியது, தனியார் பள்ளிகளில் அனைத்து வசதியும் இருப்பதால் வெற்றி பெறுகின்றனர். அரசு பள்ளி மாணவர்கள் எவ்வித உபகரணமும் இல்லாமல் திறமையால் கடைசி வரையிலும் வருகின்றனர். சிலர் வெற்றியும் பெறுகின்றனர். இவர்களுக்கு போதிய பயிற்ச்சி மற்றும் உபகரணம், அரங்குகள் இருந்தால் கண்டிப்பாக ஜெயிப்பார்கள். கடந்த காலங்களில் தொண்டி பகுதியிலிருந்து மாநில அளவில் பரிசுகளை பெற்ற வீரர்களும் உண்டு. விளையாட்டு துறையில் கல்வி துறை போதிய கவனம் செலுத்தி மாணவர்களுக்கு தேவையான உதவியை செய்ய முன் வரவேண்டும். தொண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு உபகரணம் மற்றும் அரங்குகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : sports stadium ,Thondi Government School ,
× RELATED சென்னை உயர் நீதிமன்றத்தின்...