×

கடலாடி அருகே தரமற்ற தரைப்பாலத்தில் தேங்கிய மழை தண்ணீர்

சாயல்குடி, நவ.20:  கடலாடி அருகே ஆப்பனூரிலிருந்து கிடாத்திருக்கை செல்லும் வழியிலுள்ள தரைப்பாலம் சேதமடைந்ததால், புதிய பாலம் கட்டிதர கிராமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலாடி, முதுகுளத்தூர் சாலையிலிருந்து பிரிந்து ஆப்பனூர் வழியாக கிடாத்திருக்கை செல்ல பிரதான சாலை உள்ளது. இச்சாலையை ஆப்பனூர், அரியநாதபுரம், தெற்கு கொட்டகை, பறையங்குளம், கிடாத்திருக்கை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமமக்கள் போக்குவரத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர். இங்கு பிரசித்தி பெற்ற அரியநாயகி அம்மன் கோயிலும் உள்ளது. இங்கு செவ்வாய், வெள்ளி கிழமை உள்ளிட்ட விஷேச நாட்களில் அதிகமானோர் இச்சாலை வழியாக வந்து செல்வர். சேதமடைந்த 9 கிலோ மீட்டர் சாலை கடந்த 5 வருடங்களுக்கு முன்பு புதியதாக போடப்பட்டது.

சாலை தரமற்று போடப்பட்டதால் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு, சேதமடைந்து கிடக்கிறது. தற்போது இப்பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் சாலை முற்றிலும் சேதமடைந்து, பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் தண்ணீர் தேங்கி பள்ளத்தில் சிக்கி, கீழே விழுந்து விபத்து ஏற்படுவதாகவும், நான்கு சக்கர வாகனங்கள் சிக்கி சேதமடைந்து வருவதாக கூறுகின்றனர்.

மேலும் ஆப்பனூர் கண்மாய் மேற்குபகுதியில் உள்ள தரைப்பாலம் சேதமடைந்ததால், குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் விவசாய பணிகளுக்காக ஆட்களை ஏற்றிச் செல்லும் வாகனம், இச்சாலை வழியாக செல்லும் பள்ளி வேன்கள் மற்றும் இதர வாகனங்கள் சேற்றில் சிக்கி கொள்ளுவதால் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் அவதிப்படுவதாக கூறுகின்றனர். கடலாடி பகுதியிலிருந்து கிடாத்திருக்கை செல்ல சுமார் 12 கிலோ மீட்டர் தூரம் உள்ள ஏனாதி வழியாக கிடாத்திருக்கை செல்லும் நிலை உள்ளதாக கூறுகின்றனர். எனவே ஆப்பனூரில் சேதமடைந்த தரைப்பாலத்தை அகற்றி விட்டு புதிய பாலம் கட்ட வேண்டும் என இப்பகுதியினர் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : sea floor ,
× RELATED கண்மாயில் தேங்குமா மழைநீர்?