×

பட்டாக்களில் பிழை ஏற்பட்டால் தாசில்தாரே கணினி திருத்தம் செய்ய வேண்டும் விவசாயிகள் வேண்டுகோள்

ஆர்.எஸ்.மங்கலம், நவ. 20:  ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நில உடைமைகளில் ஏற்பட்டுள்ள பிழைகளை தாசில்தாரே நேரடியாக கணிணி திருத்தம் செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாடானை தாலுகாவில் இருந்து பிரித்து 35 ஊராட்சிகள் மற்றும் ஒரு பேரூராட்சியை உள்ளடக்கி புதிய தாலுகா உருவாக்கப்பட்டு தனி தாலுகாவாக செயல்பட்டு வருகிறது. இதில் ஆர்.எஸ்.மங்கலம், ஆனந்தூர், சோழந்தூர் என மூன்று வருவாய் பிர்க்காகள் உள்ளனர். இதில் உள்ள விவசாய பொதுமக்கள் ஏற்கனவே மேனுவல் ரெக்கார்டுகளாக அந்தந்த வருவாய் கிராமங்களின் உள்ள நில உடைமைகள் 10(1) அடங்கல், பட்டா, சிட்டா ஆகியவற்றை அந்த குரூப்பில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் மூலமாக பராமரிக்கபட்டு வந்தனர். இதனை கணினி மயமாக்குகின்றோம் என்று கூறி அனைத்து நில உடைமைகளின் விபரங்களை கணிணியில் பதிவேற்றம் செய்தனர்.

இதில் ஏராளமான குளறுபடிகள் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. உதாரணமாக கிராம நிர்வாக அலுவலரின் புத்தகத்தில் உள்ள கணக்கில் உள்ள நிலை உரிமையாளரின் பெயருக்கு பதிலாக கணினியில் வேறு ஒருவருடைய பெயர் இருக்கின்றது. இது பெரும்பாலான ஏழை விவசாயிகளுக்கு இது புரியாமல் கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர். காரணம் நம்முடைய நிலம் நாம தானே விவசாயம் செய்கின்றோம். அனுபவம் செய்கின்றோம் என நினைத்து மிதமாக இருந்து விடுகின்றனர். தங்களுடைய நிலத்தின் பெயரில் வங்கி கடன் வாங்க செல்லும் பொழுதோ அல்லது பயிர் காப்பீடு செய்யப் போகும் பொழுதோ கணினி10 (1) கேட்கிறார்கள். அப்போதுதான் தன்னுடைய சொத்து மற்ற ஒருவர் பெயரில் இருப்பது தெரிய வருகின்றது. சம்மந்தப்பட்ட தாலுகா அலுவலகத்திற்கு சென்று கேட்டால், இதனை திருத்தம் செய்ய எங்களுக்கு பவர் இல்லை என கூறி கோட்டாச்சியரிடம் மனு கொடுக்க சொல்லி தட்டி கழித்து விடுகின்றனர்.

கோட்டாச்சியரிடம் மனு செய்தால், ஆய்வு அறிக்கையினை தாசில்தாரிடம் இருந்து பெற்று அதன் பின்னர் தான் கணிணி திருத்தம் செய்வது என்பது இப்பொழுது நடைமுறையில் உள்ளதாக தெரிய வருகின்றது. இதனால் பொதுமக்களுக்கு காலவிரயமும் அலைச்சலும் மன உளைச்சலும் ஏற்படுகின்றது. எனவே இவற்றை தவிர்க்கும் விதமாக கணினி திருத்தம் செய்யும் பணியை நேரடியாகவே தாசில்தார் அளவில் செய்து தந்தால் பொதுமக்களுக்கு உதவியாக இருக்கும். எனவே மாவட்ட நிர்வாகம் விரைவில் இதற்கான உத்தரவை அளிக்க முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், ஒரு நில உடைமையில் கணிணி திருத்தம் செய்ய வேண்டும் என்றால் சுமார் 70 கி.மீ தூரத்தில் உள்ள ராமநாதபுரம் ஆர்.டி.ஓ அலுவலகம் செல்ல வேண்டி இருக்கிறது. இதனால் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் மிகுந்த சிரமமாக உள்ளது. இதனை தவிர்க்க  ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவிலேயே தாசில்தார் அலுவலகத்தின் மூலமாக நேரடியாக தாசில்தாரே திருத்தம் செய்ய மாவட்ட நிர்வாகம் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : Dasillard ,error ,
× RELATED தொடர் விடுப்பில் தாசில்தார் அவசர சான்றுகள் பெற முடியாமல் மக்கள் அவதி