அலங்காநல்லூர் பகுதியில் புதிய நெல் ரகங்களை தாக்கும் பூச்சிநோய் இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

அலங்காநல்லூர், நவ. 20: அலங்காநல்லூர் பகுதியில் புதிய நெல் ரகங்களை பூச்சி நோய் தாக்கி வருவதால் இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அலங்கநல்லூர், வலசை, குலமங்கலம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் முதல்போக சாகுபடியில் பயிர் செய்த நெற்பயிகள் கதிர்பிடிக்கு தருவாயில் நோய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து வலசை கண்ணன் கூறுகையில்,‘புதிய ஆராய்ச்சி நெல் விதைகளான அட்சயா, பவானி, பவித்ரா, புல்லட் என்ற பெயர்களில் விற்பனை செய்தனர். ஒரு ஏக்கருக்கு 49 முதல் 50 மூடை வரை மகசூல் தரும் என்று தெரிவித்த காரணத்தால் இதுபோன்ற நெல் ரகங்களை தேர்வு செய்தோம். மேலும் குறுகிய காலத்தில் அதிக விலையும் மகசூலும் கிடைக்கும் என்று நம்பினோம். தற்போது பெய்த தொடர் மழையினால் நெற்பயிர்களில் பூச்சிநோய் தாக்கி பயிர்கள் அனைத்தும் முற்றிலும் சேதமடைந்துள்ளது. வேளாண்மை துறையினர் பரிந்துரையில் மருந்துகள் தெளித்தும் பயனில்லை. இதுபோன்ற ஆராய்ச்சி நெல் ரகங்களை போலி விளம்பரங்கள் மூலம் விவசாயிகளை ஏமாற்றி விற்பனை செய்யும் நெல்விதை நிறுவனங்களை தடை செய்ய வேண்டும். விதைநெல் விநியோகம் செய்த கம்பெனிகளிடம் இருந்து உரிய இழப்பீட்டை விவசாயிகளுக்கு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்’ என்றனர்.

Related Stories: