×

மதுரை மாவட்ட வாக்காளர் பட்டியலில் உள்ளாட்சி தேர்தலில் 28,535 வாக்குகள் உயர்வு மக்களவை தேர்தலுக்கு பிறகு சேர்ப்பு

மதுரை, நவ. 20: உள்ளாட்சி தேர்தலுக்கான மதுரை மாவட்ட வாக்காளர் பட்டியலில் மக்களவை தேர்தலுக்கு பிறகு 28 ஆயிரத்து 535 வாக்குகள் சேர்க்கப்பட்டு உயர்ந்துள்ளன. இந்திய தேர்தல் ஆணையம் தயாரித்த சட்டப்பேரவை தொகுதி வாரியான வாக்காளர் பட்டியலில் இருந்து, உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வார்டு வாரியாக பிரித்து தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடைசியாக தயாரித்து கடந்த பிப்ரவரியில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் மதுரை மாவட்டத்திலுள்ள 10 சட்டபேரவை தொகுதிகளிலும் மொத்தம் 25 லட்சத்து 66 ஆயிரத்து 319 பேர் இடம் பெற்று இருந்தனர். இதில் ஆண்- 12,68.332. பெண்கள்- 12,97,864, திருநங்கை- 123 இந்த பட்டியலில் இருந்து உள்ளாட்சி தேர்தலுக்கு தயாரித்து வெளியிடப்பட்டுள்ள மதுரை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர் விவரம் வருமாறு:- மொத்தம் 25 லட்சத்து 94 ஆயிரத்து 854 பேர். ஆண்- 12,80,870 பேரும், பெண்- 13,13,874 பேரும், திருநங்கை- 110 பேர் உள்ளனர். இதன்படி மக்களவை தேர்தலுக்கு பிறகு புதிதாக மாவட்டம் முழுவதும் 28,535 வாக்காளர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மாவட்டம் முழுவதும் 420 ஊராட்சிகள் உள்ளன. இதற்கான தலைவர், வார்டு உறுப்பினர் மட்டும் அரசியல் கட்சிகளின் சின்னமின்றி பொதுவான சின்னங்கள் ஒதுக்கப்பட்டு, வாக்குசீட்டு அடிப்படையில் நடக்கிறது. ஆனால் கிராமங்களில் நடைபெறும் ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் மட்டும் கட்சி சின்னங்கள் ஒதுக்கப்படுகின்றன. ஒன்றிய கவுன்சிலர்கள் இந்த மாவட்டத்திலுள்ள 13 ஒன்றிய தலைவர் மற்றும் மாவட்ட ஊராட்சி தலைவரை தேர்வு செய்வார்கள். மதுரை மாநகராட்சியிலுள்ள 100 வார்டுகளிலும் மொத்தம் 12,87,854 வாக்காளரும், 3 நகராட்சி, 9 பேரூராட்சி, 420 ஊராட்சி பகுதிகளில் 13,07346 வாக்காளரும் மற்றும் திருநங்கைகளும் உள்ளனர். மேயர் தேர்வு முறை மாறி சம இடம் பிடித்தால் குலுக்கு சீட்டா? குதிரை பேரமா?:

* மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் நேரடியாக மக்கள் வாக்களித்து தேர்வு முறையை மாற்றி, கவுன்சிலர்களே மேயர், தலைவர்களை தேர்வு செய்யும் முறைக்கு சட்டத்திருத்தம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த முறை அமலானால், மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளில் மேயரை தேர்வு செய்ய 51 கவுன்சிலர்கள் தேவைப்படும். இந்த முறை 1978 மற்றும் 2008 மாநகராட்சி தேர்தலின்போது அமலில் இருந்தது. இரு கட்சிகளிடையே தலா 50 சீட் ஜெயித்தால் குலுக்கல் முறையில் மேயரை தேர்வு செய்யும் நிலைக்கு தள்ளப்படும். ஏற்கனவே 2001ல் மண்டல தலைவர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

* திருமங்கலம் நகராட்சியில் 27 வார்டு இருப்பதால் தலைவரை தேர்வு செய்ய 14 கவுன்சிலரும். உசிலம்பட்டி நகராட்சியில் தலைவரை தேர்வு செய்ய 24 வார்டுகளில் 13 கவுன்சிலரும், மேலூர் நகராட்சியில் 27 வார்டுகளில் தலைவர் தேர்ந்தெடுக்க 14 கவுன்சிலர் தேவைப்படும்.
* எழுமலை பேரூராட்சி 18 வார்டுகளில் தலைவர் தேர்வுக்கு 10 கவுன்சிலர்களும்,  அ.வல்லாளபட்டி பேரூராட்சி 15 வார்டுகளில் தலைவர் தேர்வுக்கு 8 கவுன்சிலரும்,  பரவை பேரூராட்சி தலைவருக்கு 15 வார்டுகளில் 8 கவுன்சிலரும் தேவைப்படும். இதேபோல், அலங்காநல்லூர் பேரூராட்சி தலைவருக்கு 15 வார்டுகளில் 8 கவுன்சிலரும், பாலமேடு பேரூராட்சி தலைவருக்கு 15 வார்டுகளில் 8 கவுன்சிலரும், சோழவந்தான் பேரூராட்சி தலைவருக்கு 18 வார்டுகளில் 10 கவுன்சிலரும், வாடிப்பட்டி பேரூராட்சி தலைவராக 18 வார்டுகளில் 10 கவுன்சிலரும் தேவைப்படும். மேலும், பேரையூர் பேரூராட்சி தலைவராக 15 வார்டுகளில் 8 கவுன்சிலரும்,  டி.கல்லுப்பட்டி பேரூராட்சி தலைவராக 15 வார்டுகளில் 8 கவுன்சிலரும் ஆதரவாக வாக்களித்தால் வெற்றி பெற முடியும். இரு தரப்பினருக்கு சம அளவில் வாக்குகள் இருந்தால் குலுக்கல் சீட்டு முறையில் தலைவர் தேர்வு செய்யும் நிலை ஏற்படும்.  இது கண்டிப்பாக குதிரை பேரத்திற்கும் வழிவகுக்கும்.

Tags : Madurai district ,elections ,Lok Sabha ,
× RELATED சென்னையில் திரைப்பட தயாப்பாளர் சங்க...