×

சிகிச்சைக்கு அழைத்து சென்றவர் சாவில் சந்தேகம் மருத்துவமனை மீது நடவடிக்கை கோரி மறியல்

உசிலம்பட்டி, நவ. 20: பேரையூர் தாலுகா, சேடபட்டி ஒன்றியத்திற்குட்பட்டது ஆத்தாங்கரைபட்டி. இவ்வூரில் கடந்த நவ. 12ம் தேதி இங்குள்ள சமுதாயக்கூடத்தில் திருமங்கலத்திலுள்ள தனியார் மருத்துவமனையும், தனியார் அமைப்பும் இணைந்து பொது மருத்துவ முகாம் நடத்தியுள்ளனர். இம்முகாமில் சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு தவசி (70), பெரியசாமி, தங்கத்தாய், மச்சக்காளை ஆகியோரை திருமங்கலம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதில் தவசி மட்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து தவசி மகன் கடந்த நவ.16ம் தேதி எழுமலை போலீசில் புகார் அளித்தார். அன்றிரவு நாகமலைபுதுக்கோட்டை காவல்நிலையத்திற்குட்பட்ட நான்கு வழிச்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி காயங்களுடன் தவசி இறந்து விட்டதாகவும், அவரது உடல் மதுரை அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் நாகமலைபுதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையறிந்த தவசியின் உறவினர்கள் நேற்று எழுமலை- எம்.கல்லுப்பட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், திருமங்கலம் தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர் சிகிச்சை முடித்து பாதுகாப்பாக வீட்டிற்கு வந்து விடுகிறோம் எனக்கூறி அழைத்து சென்றார்கள், இப்போது தவசி விபத்தில் பலியாகி விட்டதாக கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே இதற்கான விளக்கத்தை தருவதுடன்  தனியார் மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். தகவலறிந்ததும் உசிலம்பட்டி டிஎஸ்பி ராஜா தலைமையிலான போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதன்பிறகே அனைவரும் மறியலை கைவிட்டு மேலும் பேச்சுவார்த்தைக்காக உசிலம்பட்டி டிஎஸ்பி அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றனர்.

Tags : Savil Hospital ,
× RELATED பேரறிவாளனுக்கு நரம்பியல் சிகிச்சை