ஸ்மார்ட் சிட்டி பணிக்காக வைகைக்கரை சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம் மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்

மதுரை, நவ. 20: மதுரையில் ஸ்மார்ட் சிட்டி பணிக்காக போலீஸ் உதவிடன் வைகைக்கரை சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி துவங்கியது. பொதுமக்கள் அதிகாரிகள், ஊழியர்களை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாநகருக்குள் 11 கிமீ தூரத்திற்கு, வைகை ஆறு கடந்து செல்கிறது. பாதாள சாக்கடை வசதி செய்யாததால், ஆற்றுக்குள் மாநகராட்சியே கழிவுநீரை கலக்க செய்கிறது. மேலும், பொதுமக்கள் கட்டிட கழிவுகள் உள்ளிட்ட குப்பைகளை ஆற்றுக்குள் வீசி வருகின்றனர். மொத்தத்தில் 11 கிமீ தூரமுள்ள வைகை ஆறு, சென்னை கூவம் ஆறு போல் மாறி வருகிறது. இந்நிலையில், ஸ்மார்ட் சிட்டி பணிக்காக ஆற்றின் இருபுற கரைகளிலும் கான்கிரீட் சுவர் எழுப்பும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த கான்கிரீட் சுவர் கட்டும் பணியை பொதுப்பணித்துறையும், மாநகராட்சியும் தனித்தனியே செய்கின்றன. இப்பணி முடிந்ததும், இருபக்கமும் பூங்கா, இருவழி சாலை ரோடு போடப்படும். குறிப்பாக ஆற்றுக்குள், குப்பை கழிவுகள் போடுவது முற்றிலும் தடுக்கப்படும். தற்போது ஆற்றில் வெள்ளம் போவதால் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சுற்றுச்சுவருக்கு இடையூறாக ஆழ்வார்புரத்தில் இருந்து மதிச்சியம் வரை கரையோரத்தில் இருக்கும் கட்டிட ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி முடிவு செய்தது. ஏனெனில் இதனை அகற்றினால்தான், சுற்றுச்சுவர் முழுமையாக கட்ட முடியும். அதன்படி மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு, ‘தாங்களே அகற்றிக்கொள்ளுங்கள், இல்லையென்றால் மாநகராட்சியே அகற்றும்’ என ஏற்கனவே கால அவகாசம் தந்து, கெடு நோட்டீசுகள் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த நோட்டீசை யாருமே கண்டு கொள்ளவில்லை. இதனால் நேற்று காலை மாநகராட்சி அதிகாரிகள் ேமற்பார்வையில் ஊழியர்கள், 10 பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகள், ஊழியர்களை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டவர்களுடன் பேசினர். இதனை தொடர்ந்து அதிகாரிகள், ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து இன்றும் ஆக்கிரமிப்பு பணிகள் நடைபெறும். இங்குள்ள 10க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிபடும் எனத்தெரிகிறது.

Related Stories: