உலக கழிவறை தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி, கருத்தரங்கம்

பட்டிவீரன்பட்டி, நவ. 20: உலக கழிப்பறை தின விழாவினை முன்னிட்டு பட்டிவீரன்பட்டி பகுதியில் விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. அய்யம்பாளையம் பேரூராட்சியில் உலக கழிப்பறை தினத்தினை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் திறந்தவெளியில் மலம் கழிப்பதை தவிர்ப்போம், தனிநபர் கழிப்பறையை வீடுதோறும் அமைத்து சுகாதாரம் காப்போம் போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

இதனைத்தொடர்ந்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் அய்யம்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் பாலமுருகன், கவிஞர் சக்திஜோதி உட்பட பலர் கலந்துகொண்டனர். இதில் பேசியவர்கள் ஒவ்வொருவரும் தங்களது வீடுகளையும், சுற்றுப்புறத்தையும் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் இன்றி சுத்தமாக வைக்க வேண்டும். திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை தவிர்த்து அதற்காக உள்ள கழிவறைகளை பயன்படுத்த நாம் கற்பதைவிட இதை நம்வீட்டு குழந்தைகளுக்கு சொல்லிதரவேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இந்த கூட்டத்தில் சுயஉதவிக்குழுவைச் சேர்ந்த பெண்கள், கல்லூரி மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதேபோல் பட்டிவீரன்பட்டி பேரூராட்சியில் செயல் அலுவலர் உமாசங்கரி தலைமையிலும் பட்டிவீரன்பட்டி, அண்ணாநகர், ரேடியோ மைதானம் உள்ளிட்ட பகுதிகளிலிலும், சேவுகம்பட்டி பேரூராட்சியில் எம்.வாடிப்பட்டி, முத்துலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் செயல் அலுவலர் ராஜசேகர் தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

Related Stories: