×

ஆந்திராவில் தப்பிய சென்னை ரவுடி கோவளத்தில் சுற்றி வளைத்து கைது

திருப்போரூர், நவ.20: சென்னை காசிமேடு சிங்காரவேலர் நகரை சேர்ந்தவர் பாபு (எ) பல்சர் பாபு (30). பிரபல ரவுடி. இவர் மீது சென்னை மற்றும் ஆந்திர மாநிலம் காளஹஸ்தி, புத்தூர் ஆகிய காவல் நிலையங்களில் கொள்ளை வழக்குகள் உள்ளன. கடந்த மாதம் நடந்த ஒரு கொள்ளை வழக்கில், புத்தூர் போலீசார், பாபுவை பிடித்து காவல் நிலையத்தில் விசாரித்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களிடம் இருந்து தப்பினார். இதையடுத்து புத்தூர் போலீசார், அவரை பல இடங்களிலும் தேடினர். இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னை காசிமேட்டில் உள்ள பாபு வீடு அமைந்துள்ள பகுதியில் சென்னை போலீசாரின் உதவியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அவரது செல்போன் சிக்னல், சென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலை கோவளம் பகுதியில் இருப்பது தெரிந்தது. இதையடுத்து கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தொடர்ந்து, கேளம்பாக்கம் தலைமை காவலர் சுதர்சன், போலீஸ் நண்பர்கள் குழுவை சேர்ந்த ராஜேஷ் என்பவருடன் கோவளம் சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டார்.  அப்போது பாபு, பைக்கில் அங்கு சென்றார். போலீசாரின் சோதனையை கண்ட அவர், பைக்கை போட்டுவிட்டு தப்பியோட முயன்றார். இதை பார்த்த தலைமை காவலர் சுதர்சன் மற்றும் ராஜேஷ், பாபுவை மடக்கி பிடித்தனர்.அப்போது அவரது கையில் இருந்த தகடு போன்ற பொருளால் இருவரையும் பாபு தாக்கினார். இதில் ராஜேஷ் கழுத்தில் காயம் ஏற்பட்டது. தலைமை காவலர் சுதர்சனை, தனது பல்லால் கடித்தான். ஆனாலும் அவர்கள், விடாமல் போராடி பாபுவை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். புகாரின்படி போலீசாரை தாக்க முயன்றதாக பாபு மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 இதற்கிடையில், பாபுவை தேடி வந்த ஆந்திர போலீசார், பாபு கொலை முயற்சி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டதால் திரும்பி சென்றனர்.
* செங்கல்பட்டு: செங்கல்பட்டு அனுமந்தபுத்தேரியை சேர்ந்தவர் மகேந்திரன். மாநகர போக்குவரத்து கழக ஓட்டுநர். இவரது மனைவி தனலட்சுமி. தனியார் பள்ளியில் கிளர்க்காக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு கிருஷ்ணப்பிரியா என்ற மகளும் ஒரு மகனும் உள்ளனர்.
சண்முகப்பிரியா, செங்கல்பட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். சமீபத்தில் நடந்த தேர்வில் சண்முகப்பிரியா மிகவும் குறைவான மதிப்பெண் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர், நேற்று முன்தினம் வீட்டின் சமயலறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதைதொடர்ந்து பிரேத பரிசோதனை முடிந்து, ேநற்று சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மகளின் சடலத்தை பார்த்த தாய் தனலட்சுமி, துக்கம் தாங்க முடியாமல், மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில், அவரது 2 கால்களும் முறிந்தன.
இதை பார்த்ததும், அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள், அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
புகாரின்படி செங்கல்பட்டு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
* திருப்போரூர்: திருப்போரூர் அடுத்த ஆமூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (40). இவரது மனைவி பாஞ்சாலி. இவர்களுக்கு பவித்ரா (15) என்ற மகள் உள்ளார். இவர்கள் பூம்பூம் மாடு வைத்து நாடோடி பிழைப்பு நடத்தி வந்தனர். பாஞ்சாலியின் சகோதரி கற்பகம், தனது கணவர் நாகப்பன் மற்றும் மகள் துர்கா (16) ஆகியோருடன் திருப்போரூர் அடுத்த தண்டலம் விநாயகர் கோயில் குளக்கரை அருகே தங்கி வசித்து வந்தனர்.
இந்நிலையில் பாஞ்சாலி, தனது கணவர் சேகர் மற்றும் மகள் பவித்ரா ஆகியோருடன் தனது தங்கை கற்பகத்தை சந்திக்க கடந்த 15ம் தேதி தண்டலம் கிராமத்துக்கு சென்றனர். அன்று இரவு அனைவரும் குளக்கரையில் ஒன்றாக தங்கினர்.
மறுநாள் 16ம் தேதி காலை 6 மணியளவில் பாஞ்சாலியின் மகள் பவித்ரா மற்றும் கற்பகத்தின் மகள் துர்கா ஆகிய இருவரும் டீக்கடைக்கு சென்று டீ வாங்கி வருவதாக கூறி சென்றனர். நீண்ட நேரமாகியும் அவர்கள் வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், தங்களது மகள்களை பல இடங்களில் தேடினர். ஆனால், எந்த தகவலும் இல்லை.
இதுகுறித்து, திருப்போரூர் போலீசில் நேற்று, சேகர் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமிகளை தேடி வருகின்றனர். நாடோடி சிறுமிகள் திடீரென மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
* செங்கல்பட்டு: செங்கல்பட்டு நாவலர் நெடுஞ்செழியன் தெருவை சேர்ந்த அசோக் (25). பிரபல ரவுடி. இவர் மீது பல காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கடந்த ஒரு ஆண்டுக்கு முன், செங்கல்பட்டு ரேடியோ மலையில், பட்டபகலில் குள்ள சீனு என்பவரை, அசோக் கொலை செய்தார். கடந்த 6 மாதத்துக்கு முன்பு புலிப்பாக்கம் எடைமேடையில் வேலை பார்த்து வந்த விஜயகுமார் என்பவரை மிரட்டி ₹20 ஆயிரம் கேட்டார். அவர் தர மறுத்ததால், விஜயகுமாரை தலையில் வெட்டி பணத்தை பறித்தார். அசோக்குடன், அவரது கூட்டாளி திருப்போரூரை சேர்ந்த விக்னேஷ் (26) என்பவரும் தலைமறைவானார்.
இதுதொடர்பாக, செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் வலைவீசி தேடி வந்தனர். ஆனால், அவர்கள் தலைமறைவாகவே இருந்தனர். இந்நிலையில், 2 பேரும், திருப்போரூர் பகுதியில் சுற்றி திரிவதாக செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அலெக்சாண்டர், எஸ்ஐ மணிகண்டன் மற்றும் போலீசார், திருப்போரூர் பகுதியில் சுற்றி திரிந்த அசோக், விக்னேஷ் ஆகியோரை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவர்களை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தாம்பரம்: கிழக்கு தாம்பரம், கணபதிபுரம், வடக்கு தெருவை சேர்ந்தவர் காட்வின் சாத்ராக் (40). இவரது வீட்டில் ஜான்பால் (36) என்பவர் வசிக்கிறார். நேற்று முன்தினம் இரவு ஜான்பால் வேலைக்கு சென்றார். அவரது மனைவி அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு, காலையில் வீடு திரும்பினார்.
அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த ஒரு சவரன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.
புகாரின்படி சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். மேற்கண்ட பகுதியில் தொடர் திருட்டு, கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில் இதுவரை குற்றவாளிகள் பிடிபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Chennai Rowdy ,Andhra ,
× RELATED கோவை அருகே போலி தங்க பிஸ்கட் மோசடி: ஆந்திராவை சேர்ந்த 7 பேர் கைது