×

களியனூர் ஊராட்சி அரசு நடுநிலைப்பள்ளி அருகே சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

வாலாஜாபாத், நவ. 20: வாலாஜாபாத் ஒன்றியம் களியனூர் ஊராட்சியில், சிதிலமடைந்து ஆபத்தான நிலையில், குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இதனால், அப்பகுதி பொதுமக்கள், மாணவர்கள் அச்சத்துடன் உள்ளனர். எனவே, இதனை அகற்றிவிட்டு புதிய குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். வாலாஜாபாத் ஒன்றியம் களியனூர் ஊராட்சியில் 2000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு, நடுநிலைப்பள்ளி, அங்கன்வாடி மையம், நூலகம், ஊராட்சி மன்ற கட்டிடம், நியாய விலைக்கடை, இ சேவை மையம் உள்பட பல அலுவலகங்கள் உள்ளன. இதன் மையப்பகுதியில், கடந்த 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது.30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில், பாலாற்று குடிநீரை ஏற்றி, பின்னர் கிராம மக்களுக்கு, குழாய் மூலம் தினமும் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த தொட்டியின் தளங்கள் உடைந்தும், தாங்கி நிற்கும் தூண்கள் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இதனால், அவ்வழியாக செல்லும் பள்ளி மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், களியனூர் ஊராட்சியில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அரசு நடுநிலைப் பள்ளியின் பின்புறம் அமைந்துள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டியில் தற்போது ஆங்காங்கே சிதலமடைந்து சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்துள்ளது. இதனால், எந்த நேரத்தில் இடிந்து விழுமோ என அச்சத்துடன் வாழ்கிறோம்.

மேலும், இத நீர்த்தேக்கத் தொட்டியை பராமரிக்கவும், சுத்தம் செய்யவும் மேலே ஏறுவதற்கு இங்குள்ள ஊழியர்கள் அச்சப்படுகின்றனர். இதனால், இந்த தொட்டியை அகற்றிவிட்டு, புதிதாக தொட்டி அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம். பலமுறை பல்வேறு அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்துவிட்டோம். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் நிலைப்பாடுகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Kaliyanur Panchayat ,Middle School ,Government ,
× RELATED உலக புவி தினத்தையொட்டி கொப்பம்பட்டி...