×

மணிமங்கலத்தில் பரபரப்பு காவல் நிலையத்தில் புகுந்த நல்லபாம்பு

ஸ்ரீபெரும்புதூர், நவ.20: மணிமங்கலம் காவல் நிலையத்தில், திடீரென நல்ல பாம்பு புகுந்தது. இதை பார்த்ததும், அங்கு பணியில் இருந்த போலீசார், அலறியடித்து கொண்டு ஓடினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. குன்றத்தூர் ஒன்றியம் மணிமங்கலம் பகுதியில் காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு ஒரு இன்ஸ்பெக்டர், எஸ்ஐ, சிறப்பு எஸ்ஐ, தலைமை காவலர்கள், பெண் காவலர்கள் உள்பட 30க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் உள்ளனர். இந்த காவல் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பல்வேறு வழக்கு சம்பந்தமாக, தினமும் ஏராளமான பொதுமக்கள் இங்கு வந்து செல்கின்றனர். கடந்த பல ஆண்டுகளாக  இந்த காவல் நிலையம் இட நெருக்கடியில் செயல்பட்டது. இதையடுத்து, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய காவல் நிலைய கட்டிடம் கட்டப்பட்டது. அங்கு போலீசார், சிரமம் இல்லாமல் வேலை பார்க்கின்றனர்.

இந்நிலையில், நேற்று காலை, காவல் நிலைய எழுத்தர் அருகில் உள்ள ஆயுத கிடங்கு அறைக்கு போலீசார் சென்றனர். அப்போது அங்கு, ஒரு நல்லபாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே ‘‘பாம்பு பாம்பு’’ என கூச்சலிட்டபடி வெளியே ஓடிவந்தனர். இதையடுத்து மற்ற போலீசார் அந்த அறைக்கு சென்று, அங்கிருந்த பொருட்களை அப்புறப்படுத்தி பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் போலீசாருக்கு ஆட்டம் காட்டிய பாம்பு ஒரு மூட்டை அடியில் தஞ்சமடைந்தது. பின்னர் போலீசார், அதே பகுதியை சேர்ந்த இளைஞர்களின் உதவியுடன் பாம்பை பிடிக்க முயன்றனர். அப்போது பாம்பு, திடீரென சுமார் 2 அடி உயரத்துக்கு படம் எடுத்து சீறியது. உடனே அங்கிருந்த இளைஞர்கள், கையில் இருந்த உருட்டுக்கட்டையால், பாம்பை அடித்து கொன்றனர்.

பின்னர் காவல் நிலையம் அருகில் தீ மூட்டி பாம்பை எரித்து பால் ஊற்றினர். இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன் கட்டு விரியன் பாம்பு, இதே காவல் நிலையத்தில் புகுந்தது குறிப்பிடத்தக்கது. நல்லபாம்பு நுழைந்து படம் எடுத்து சீரியதால், அச்சமடைந்துள்ள போலீசார், மணிமங்கலம் காவல் நிலைய அறையில் உள்ள தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்.  இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags : Nallapambu ,police station ,Parambara ,Manimangalam ,
× RELATED காவல் நிலையத்தில் வெள்ளம் புகுந்தது