×

வாலாஜாபாத் பகுதிகளில் லாரிகளில் தார்பாய் போடாமல் பாதுகாப்பற்ற முறையில் கொண்டு செல்லும் ஜல்லிக்கற்கள், எம் சாண்ட்

வாலாஜாபாத், நவ.20: வாலாஜாபாத் பகுதிகளில் தார்ப்பாய் போடாமல் பாதுகாப்பற்ற முறையில் லாரிகளில் கொண்டு செல்லப்படும் ஜல்லிக்கற்கள், எம் சாண்ட் ஆகியவற்றால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளவதில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். வாலாஜாபாத் பகுதியை சுற்றிலும், 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில் ஆர்ப்பாக்கம், பழைய சீவரம், திருமுக்கூடல், மதூர் உள்பட பல கிராமங்கள் மலை பகுதிகளாக உள்ளன. இங்குள்ள கல்குவாரிகளில் இருந்து ஜல்லிக்கற்கள் உடைக்கப்பட்டு காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், தாம்பரம் உள்பட பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் கட்டுமான பணிகளுக்காக, லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. மேலும், மலை மண், எம்சாண்ட் உள்ளிட்ட பாறைகளும் பல்வேறு நகர்ப்புற பகுதிகளுக்கு லாரிகளில் எடுத்து செல்லப்படுகின்றன. இதுபோல் செல்லும் லாரிகள் வாலாஜாபாத் வழியாக இரவு பகலாக சென்று வருகின்றன. இதனால் இப்பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
இதுபோன்று வாலாஜாபாத் நகர்ப்புற பகுதிகளில் ஜல்லிக்கற்கள், எம் சாண்ட் கொண்டு செல்லும் லாரிகளில் முறையாக தார்பாய் போட்டு கொண்டு செல்வதில்லை. இதனால், அவ்வழியாக பைக்கில் செல்வோர் கடும் இன்னலுக்கு ஆளாகிகின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், வாலாஜாபாத் சுற்றிலும் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ள மக்கள் வாலாஜாபாத் வந்து, அங்கிருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம் உள்பட பல்வேறு நகர்ப்புற பகுதிகளுக்கு சென்று வருகிறோம்.
எப்போதுமே பரபரப்பாக காணப்படும் வாலாஜாபாத் ரவுண்டானா, பஸ் நிலையம், ரயில் நிலையம், சேர்க்காடு பகுதி ஆகிய பகுதிகளில் அதிக மக்கள் கூடும் இடங்களாக உள்ளன. இந்த பகுதிகளில் அதிவேகமாக செல்லும் லாரிகளால், மற்ற வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பொதுமக்களும் விபத்தை சந்திக்கின்றனர். சில நேங்களில் உயிரிழப்பு சம்பவமும் நடக்கிறது. குறிப்பாக எம்சாண்ட், சிறிய ஜல்லிக்கற்கள், லாரிகளில் குவிக்கப்பட்டு எடுத்து செல்லப்படுகின்றன. இதுபோல் எடுத்து செல்லும் லாரிகளில், ஒரு சில நேரங்களில் பள்ளம் மேடு பகுதிகளில் இறங்கி ஏறும்போது சரிந்து விழும் ஜல்லிக்கற்கள், அவ்வழியாக செல்லும் பொதுமக்களின் கண்களை பதம் பார்க்கின்றன.

ஒரு சில நேரங்களில் பஸ் உள்பட வாகனங்கள் பின் தொடர்ந்து செல்லும்போது ஜல்லிக்கற்கள் ரோட்டில் இருந்து காரின் கண்ணாடியையும் பதம் பார்க்கின்றன. இது தினமும் நடக்கும் சம்பவமாக மாறிவிட்டது. இதுகுறித்து பலமுறை போலீசார், வருவாய் துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிக வேகம், அதிக பாரத்துடன் செல்லும் வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை. மாறாக அவர்களிடம் கையூட்டு பெற்று கொண்டு, சந்தோஷமாக அனுப்பி வைக்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, வாகன சட்ட விதிப்படி லாரிகளுக்கு தார்பாய் போட்டு இயக்க வேண்டும் என கூறி, கடும் நடவடிக்கை எடுத்தால், பொதுமக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இருக்கும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Tags : M Sant ,Walajabad ,
× RELATED 100 சதவீதம் வாக்களிப்போம் என அங்கன்வாடி...