×

திருப்போரூர் ஒன்றிய அலுவலக வளாகத்தில் இரவு நேரங்களில் குடிமகன்கள் குத்தாட்டம்

திருப்போரூர், நவ.20: திருப்போரூர் ஒன்றிய அலுவலகத்தில், இரவு நேரங்களில் வரும் குடிமகன்கள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. இதனால், அங்குள்ள முக்கிய ஆவணங்கள் திருடுபோகும் அபாயமும் உள்ளது. எனவே, பாதுகாவலரை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செங்கல்பட்டு செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வட்டார வளமைய அலுவலகம், வேளாண் துறை அலுவலகம், குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகம், சார் கருவூலம், வட்டார சேவை மையம் ஆகிய அலுவலகங்கள் செயல்படுகின்றன. இந்த அலுவலகங்களுக்கு தினமும் மக்கள் பிரதிநிதிகள், ஒப்பந்ததாரர்கள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அரசு ஊழியர்களை பொறுத்தவரை தினமும் இரவு 7 மணி வரை பணிபுரிந்து விட்டு செல்கின்றனர். அதன் பிறகு இந்த அலுவலக வளாகம் திறந்தே கிடக்கிறது.

இதனால் இரவு 9 மணி முதல் சமூக விரோதிகள் இந்த அலுவலக வளாகத்தில், தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு அங்கேயே மது அருந்துகின்றனர். பின்னர் மது பாட்டில்களையும், உணவு கழிவுகளையும் அந்த வளாகத்திலேயே வீசி விட்டு செல்கின்றனர். சில நேரங்களில், கூட்டமாக வரும் குடிமகன்கள், போதை தலைக்கேறியதும், அங்கு தங்களது செல்போனில் சினிமா பாடல்களை போட்டு, குத்தாட்டம் போடுவதாக பொதுமக்கள் வேதனையுடன் கூறுகின்றனர். அதே நேரத்தில் மேற்கண்ட வாளத்தில் உள்ள அலுவலகங்களில் வைக்கப்பட்டுள் முக்கிய ஆவணங்களும் திருடுபோக வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.இதனால், காலையில் வேலைக்கு ஊழியர்களும், பொதுமக்களும் மது பாட்டில்களை பார்த்து முகம் சுளிக்க வேண்டிய நிலை உள்ளது. இதையொட்டி, தினமும் ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் இந்த மது பாட்டில்களை அகற்றுவதை ஒரு வேலையாக செய்ய வேண்டிய நிலை உள்ளது.

எனவே, இயற்கை பேரிடர் காலங்களை தவிர மற்ற நேரங்களில் இரவு நேரங்களில் அனைத்து அரசு அலுவலர்களும் வெளியேறிய உடன் பிரதான வாயில்களை பூட்டி வைக்க வேண்டும்.  இரவு பாதுகாவலர் நியமிக்க வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த அலுவலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்களும் இங்கு வரும் பொது மக்களும் வலியுறுத்துகின்றனர்.

Tags : office complex ,Thirupporeur Union ,
× RELATED ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை...